பெய்ஜிங்: சீனாவில் புதிதாக புயல் ஒன்று உருவாகியுள்ளது என்றும் இந்த புயலால் பலத்த பாதிப்பு ஏற்படும் என்பதால் சீனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது.
சீனாவில் ஏற்கனவே ஒருபுறம் கடுமையான மழை வெள்ளம், மற்றொரு பக்கம் கடுமையான வறட்சி ஏற்பட்டு வரும் நிலையில், புதிதாக புயல் தாக்கும் என்று அங்குள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், ”நடப்பு 2022ம் ஆண்டின் மிகவும் சக்திவாய்ந்த ‘ஹின்னம்னோர்’ புயல் சீனாவை நெருங்கியுள்ளது என்றும் புயலை எதிர்கொள்ள தயராக இருக்குமாறும் கூறியுள்ளது. மேலும் சீனாவுக்கு இந்த புயல் கடும் சேதத்தை ஏற்படுத்தும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது சீன மக்களுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சீனா, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது.
ரோந்து பணியில் 50 ஆயிரம் போலீசார்
சீனாவின் கிழக்கு பகுதிகளில் புயல் கரையக் கடக்கும் என்பதால், அங்குள்ள நகரங்களில் படகு சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பள்ளிகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளன. ஆபத்தான பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள் ஷாங்காய் நகரில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சீனாவின் கிழக்கு தொழில் நகரமான வென்சூ நகரில் அனைத்து பள்ளிகள் மூடப்பட்டன.
நடப்பு ஆண்டின் வலுவான புயல்
2022 -ஆம் ஆண்டின் வலுவான புயல் இதுதான் என்று கணிக்கப்பட்டுள்ள ஹின்னம்னோர் புயல், கிழக்கு சீனக்கடலில் வடக்கு நோக்கி படிப்படியாக நகர்ந்து வருகிறது. இந்த புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு 175 கி.மீட்டர் வேகத்தில் காற்றும் வீசக்கூடும் என்று ஹாங்காங் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. புயலால், கொரிய தீபகற்பத்திலும் கனமழை கொட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், கொரிய தீபகற்ப பகுதியில் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது.
மஞ்சள் நிற எச்சரிக்கை
சீனாவின் தேசிய வானிலை ஆய்வு நிறுவனம், மஞ்சள் நிற எச்சரிக்கையை விடுத்துள்ளது. நாட்டின் வடகிழக்கு நகரங்களான ஷேஷியாங், ஷாங்காய் மற்றும் தன்னாட்சி பிரதேசமான தைவானில் மிக கனமழை பெய்யும் என்று சீன வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் காரணமாக கப்பல்கள் துறைமுகங்களுக்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது இடங்கள் அல்லது உள்ளரங்குகளில் மக்கள் கூட்டமாக எங்கும் செல்லக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜப்பான், தைவானிலும்
ஜப்பான், தைவானிலும் இந்த புயலின் தாக்கம் இருக்கும் என்பதால் அங்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. தைவானில் நேற்று முதலே கனமழை கொட்டி வருவதால் தைபே நகரை ஒட்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பு முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஜப்பானின் ஒகின்வா பகுதியில் விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. மீட்பு பணிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது