புதுடெல்லி: மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகருக்கு எதிரான ரூ.200 கோடி மோசடி புகார் தொடர்பான வழக்கில் நடிகை நோரா பதேஹியிடம் டெல்லி போலீஸார் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
கர்நாடகாவைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர், தனக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதாகக் கூறி பலரிடம் பண மோசடி செய்து வந்தார். இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தபடியே, மற்றொரு மோசடி வழக்கில் கைதாகி தன்னுடன் சிறையில் இருந்த தொழிலதிபருக்கு ஜாமீன் பெற்றுத் தருவதாகக் கூறிய சுகேஷ், அந்தத் தொழிலதிபரின் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக சுகேஷ், அவரது மனைவி உள்ளிட்டோர் மீது அமலாக்கத் துறையும் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாரும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோசடி செய்த பணத்தில் இந்தி நடிகைகள் ஜாக்குலின் பெர்னாண்டஸ், நோரா பதேஹி உள்ளிட்டோருக்கு விலை உயர்ந்த பொருட்களை சுகேஷ் பரிசாகக் கொடுத்ததாக அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக, சுகேஷ் மற்றும் நடிகை நோரா பதேஹியிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் ஏற்கெனவே விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் நோரா பதேஹியிடம் நேற்று முன்தினம் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின்போது, சுகேஷ் சந்திரசேகருடன் தான் நேரடியாக பேசியதே இல்லை என தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஒரு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றபோது விலை உயர்ந்த ஹேண்ட்பேக் தனக்கு பரிசளிக்கப்பட்டதாகவும், ஆனால் சுகேஷிடமிருந்து விலை உயர்ந்த ஹேண்ட்பேக்கை பெறவில்லை என்றும் நோரா தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.