கிருஷ்ணகிரி: சூளகிரி அருகே போதிய விலை கிடைக்காததால், 35 டன் எடையுள்ள 700 மூட்டை வெங்காயத்தை குட்டையில் கொட்டி, விவசாயிகள் அழித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி, கெலமங்கலம், தளி, பேரிகை உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் சீதோஷ்ண நிலை காரணமாக மருத்துவ குணம் கொண்ட வெங்காயம் சாகுபடியில் கடந்த சில ஆண்டுகளாக விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு விளைவிக்கப்படும் வெங்காயத்தை வியாபாரிகளே நேரடியாக வந்து வாங்கிச் செல்வது வழக்கம்.
இந்நிலையில், நிகழாண்டில் தொடர் மழை மற்றும் போதிய விலை இல்லாததால் அறுவடை செய்யப்பட்ட வெங்காயத்தை குட்டையில் வீசி அழித்து வருவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
மருந்து தயாரிக்க பயன்
இதுதொடர்பாக சானமாவு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அணில்குமார் மற்றும் விவசாயிகள் கூறும்போது, மருந்து வெங்காயம் எனப்படும் `ரோஸ் வெங்காயம்’ கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த வகை வெங்காயம் முழுக்க, முழுக்க ஏற்றுமதிக்காக மட்டுமே சாகுபடி செய்யப்படுகிறது. வெளிநாடுகளில் மருந்து தயாரிக்க பயன்படுத்தப்படுவதால், மருந்து வெங்காயம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. தற்போது ஓசூர், சூளகிரி பகுதியில் விவசாயிகள் பலர் இவ்வகை வெங்காய சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். வெளியூரில் இருந்து வரும் வியாபாரிகள் நேரடியாக தோட்டத்திற்கே வந்து கொள்முதல் செய்வதால் போக்குவரத்து செலவு இல்லை.
விலை இல்லை
மேலும், கடந்த ஆண்டு ஒரு கிலோ மருந்து வெங்காயம் கிலோ ரூ.50 வரை விற்பனையானது. தற்போது தொடர் மழையாலும், விலை குறைந்துள்ளதாலும் வியாபாரிகள் யாரும் வெங்காயத்தை கொள்முதல் செய்ய முன்வரவில்லை.
தோட்டத்தை பராமரிக்க வேண்டியும், வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ள நிலையிலும், அறுவடை செய்யப்பட்ட 35 டன் எடையுள்ள 700 மூட்டை வெங்காயத்தை டிராக்டரில் ஏற்றி வந்து, குட்டைகளில் கொட்டி அழித்து வருகிறோம். மருந்துவெங்காயம் பயிரிட்ட விவசாயிகளுக்கு நிகழாண்டில் பெரிய அளவிலான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது, என்றனர்.