ஓணம் பண்டிகையை முன்னிட்டு, ஏற்கனவே, சென்னை, திருப்பூர், கோவை, கன்னியாகுமரி மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் நான்கு மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
கேரள மக்கள் கொண்டாடி வரும் திருவிழாக்களில் மிக முக்கியமானது ஓணம் பண்டிகை. ஒவ்வொரு ஆண்டும் மலையாள மாதமான சிங்கம் மாதத்தில் அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம் என தொடர்ச்சியாக வரும் 10 நட்சத்திர தினங்களில் கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது.
இந்த ஓணம் பண்டிகை காலத்தில் மக்கள் அதிகாலையில் எழுந்து குளித்து சுத்தமாகி, பெண்கள் கசவு எனும் வெள்ளை நிற புடவையை உடுத்துவது வழக்கம். அஸ்தம், சித்திரை, சுவாதி ஆகிய மூன்று நட்சத்திர தினத்தில் மக்கள் ஒருவருக்கொருவர் பரிசுகளை பரிமாறிக் கொள்வார்கள்.
இந்நிலையில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு 08.09.2022 (வியாழக்கிழமை) அன்று ஈரோடு, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள மாநில அரசு அலுவலகங்களில் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
உள்ளூர் விடுமுறை நாள் அன்று மாவட்டங்களில் உள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலகங்கள் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதால், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே, சென்னை, திருப்பூர், கோவை, கன்னியாகுமரி மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.