டாடா குழுமத்தின் முன்னாள் தலைவரும் தொழிலதிபருமான சைரஸ் மிஸ்திரி காலமானார். மும்பை அருகே உள்ள பால்கரில் நடந்த சாலை விபத்து காரணமாக இறந்தார். விபத்துக்குப் பிறகு, மிஸ்திரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரியின் கார், சாலையில் டிவைடரில் மோதியதில், உயிரிழந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பிற்பகல் 3.15 மணியளவில் அகமதாபாத்தில் இருந்து மும்பைக்கு மெர்சிடிஸ் காரில் மிஸ்திரி சென்று கொண்டிருந்தபோது விபத்து நடந்ததாக காவல் துறை அதிகாரி கூறினார். அவருடன் பயணித்த கார் டிரைவர் உட்பட இருவர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் குஜராத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாலாசாகேப் பாட்டீல் (டி.சி.பி., தானே) இது, குறித்துகூறுகையில், ஒரு சாதாரண சாலை விபத்து என்று தெரிகிறது. அவரது கார் டிவைடரில் மோதியதில் கார் சீர்குலையும் அளவுக்கு விபத்து நடந்தது. மிஸ்திரியுடன் காரில் இருந்த மற்றொரு நபர் உயிரிழந்தார்.
பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், “சைரஸ் மிஸ்திரியின் அகால மறைவு அதிர்ச்சியளிக்கிறது. அவர் இந்தியாவின் பொருளாதார சக்தி மீது நம்பிக்கை வைத்த, ஒரு நம்பிக்கைக்குரிய தொழிலதிபராக இருந்தார். அவரது மறைவு வர்த்தகம் மற்றும் தொழில்துறைக்கு பெரும் இழப்பு. அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு என ஆழ்ந்த இரங்கல்கள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” என்றார்.
டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரியின் மரணச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்ததாக மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயும் தெரிவித்துள்ளார். சைரஸ் மிஸ்திரி ஒரு வெற்றிகரமான தொழில்முனைவோர் மட்டுமல்ல, அவர் ஒரு இளமையான, எதிர்கால ஆளுமையாக தொழில்துறையில் காணப்பட்டார். ஒரு திறமையான தொழில்முனைவோர் காலமானதும் அவரது குடும்பத்திற்கு மட்டுமல்ல, தேசத்திற்கும் பேரிழப்பாகும். இது இந்தியாவின் தொழில்துறை உலகிற்கும் ஒரு பெரிய இழப்பாகும். அவர்களுக்கு எனது மனமார்ந்த இரங்கல்கள்.”
சைரஸ் பல்லோன்ஜி மிஸ்திரி 4 ஜூலை 1968 இல் பிறந்தார். ஷபூர்ஜி பல்லோன்ஜி குழுமத்தின் தலைவரான பல்லோன்ஜி மிஸ்திரியின் இளைய மகன் ஆவார். அவர் மும்பையில் உள்ள கதீட்ரல் மற்றும் ஜான் கானான் பள்ளியில் தனது ஆரம்பப் படிப்பை முடித்தார், பின்னர் சிவில் இன்ஜினியரிங் படிக்க லண்டன் சென்றார். டாடா குழுமத்தின் ஆறாவது தலைவராக இருந்தார். 2012ல் ரத்தன் டாடா ராஜினாமா செய்த பிறகு, சைரஸ் மிஸ்திரிக்கு டாடா சன்ஸ் தலைவர் பதவி வழங்கப்பட்டது.
இவரின் குடும்பப்பெயரில் டாடா இல்லையென்றாலும், இந்தக் குழுவின் தலைமைப் பொறுப்பை பெற்ற இரண்டாவது நபர் இவர்தான். இருப்பினும், ரத்தன் டாடாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து 2016 அக்டோபரில் டாடா சன்ஸ் தலைவர் பதவியில் இருந்து சைரஸ் மிஸ்திரி நீக்கப்பட்டார். 2019 டிசம்பரில், கம்பெனி சட்ட தீர்ப்பாயம் மிஸ்திரியை குழுவின் செயல் தலைவராக மீண்டும் நியமித்தது. ஆனால் அதற்கு முன் பிப்ரவரி 2017 இல், அவர் டாடா சன்ஸ் குழுவின் இயக்குநர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.