உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. அதே சமயம் மூளைச்சாவு அடைந்த நபரிடமிருந்து உடல் உறுப்புகளைத் தானம் பெற்று பிறருக்குப் பொருத்துவதில் பல சிக்கல்கள் இன்றளவும் நீடிக்கத்தான் செய்கின்றன. அதில் முக்கியமான ஒன்று, கால விரயமின்றி உடல் உறுப்புகளை தானம் பெறுவோருக்குப் பொருத்த வேண்டும். இந்த விஷயத்தில் சென்னையைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை ஒரு புதிய தொழில்நுட்பத்தைப் புகுத்தியுள்ளது.
டிரோன் மூலம் உடல் உறுப்புகளைக் கொண்டு செல்லும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னை எம்.ஜி.எம் ஹெல்த் கேர் மருத்துவமனையில் சனிக்கிழமை இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி வீடியோ கான்ஃபிரென்சிங் மூலம் இந்த வசதியைத் தொடங்கி வைத்துப் பேசுகையில், “”புரட்சிகரமான இந்தத் திட்டம் வெற்றி பெற்றால் இந்தியாவில் இது ஒரு மைல்கல்” என்றார்.
தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நிகழ்வில் பங்கேற்றார். இந்தப் புதிய தொழில்நுட்பம் குறித்து மருத்துவமனையின் இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைத் துறை இயக்குநர் மருத்துவர் கே.ஆர் பாலகிருஷ்ணன் கூறியது: “இதயம், நுரையீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகளை தானம் பெற்ற 4 மணி நேரத்துக்குள், நோயாளிக்குப் பொருத்தியாக வேண்டும். எல்லா நேரங்களிலும் விமானப் போக்குவரத்து கிடைக்காது. அதுபோன்ற நேரங்களிலும் சாலை வழியாக ஆன்புலன்ஸில் கொண்டு வரும்போது போக்குவரத்து மிகப்பெரிய பிரச்னையாகவே இருக்கிறது.
சென்னையில் ‘க்ரீன் காரிடார்’ எனப்படும் முறையைப் பயன்படுத்திப் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டு உடல் உறுப்பைக் கொண்டுசெல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்வதற்கு வழிவகை செய்யப்படுகிறது. ஆனால் பிற மாவட்டங்களிலிருந்து இதுபோன்ற வசதிகள் இல்லாததால் டிரோன் மூலம் கொண்டுவரும் வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறோம். தற்போது சோதனை முயற்சியாக சென்னைக்கு 10 கி.மீ தூரத்திலிருந்து கொண்டு வருவதற்கான முயற்சிகளை எடுத்திருக்கிறோம். அடுத்தடுத்து தூரத்தை அதிகரிக்கும் முயற்சியிலும் இருக்கிறோம்” என்றார்.
மருத்துவமனையின் இயக்குநர் மருத்துவர் மருத்துவர் பிரசாந்த் ராஜகோபாலன் கூறும்போது,” எங்கள் மருத்துவமனையில் 500-க்கும் மேற்பட்ட உடலுறுப்பு தான அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. அதில் போக்குவரத்துப் பிரச்னையால் கடைசி நேரத்தில் பதற்றமான சூழல் பலமுறை ஏற்பட்டுள்ளது. அந்தப் பிரச்னையைக் குறைப்பதற்கு 400 கி.மீ வரைக்கும் டிரோன் மூலம் உடல் உறுப்புகளைக் கொண்டு வரும் திட்டம் உள்ளது.
இந்த டிரோன் ஜிபிஎஸ் மூலம் கட்டுப்படுத்தப்படுவதால் நெட்வொர்க் உள்ளிட்ட தொழில்நுட்பப் பிரச்னைகள் இருக்காது. சோதனை முயற்சி செய்யப்பட்ட தரவுகள் அனைத்தையும் அரசுக்கு அனுப்பி வைத்துள்ளோம். தமிழக அரசின் அனுமதிக்காகக் காத்திருக்கிறோம்” என்றார்.