புதுடெல்லி: திட, திரவக் கழிவு நிர்வாகத்தில் திறன்பட செயல்படவில்லை என்று கூறி மேற்கு வங்க அரசுக்கு ரூ.3,500 கோடி அபராதத்தை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (என்ஜிடி) விதித்துள்ளது.
இதுதொடர்பான வழக்கு விசாரணை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி ஏ.கே. கோயல் முன்பு நடைபெற்று வந்தது. விசாரணையின் முடிவில் நீதிபதி ஏ.கே. கோயல் நேற்று வெளியிட்ட தீர்ப்பில் கூறியுள்ளதாவது:
மாசு இல்லாத சுற்றுச்சூழலை அளிக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசுக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் உள்ளது. 2022-23-ம் நிதியாண்டு பட்ஜெட் ஒதுக்கீட்டின்போது நகர்ப்புற வளர்ச்சி மற்றும் நகரசபை நிர்வாக விவகாரத் துறையின் கீழ் மேற்கு வங்க அரசு ரூ.12,818.99 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
ஆனால் அந்தத் தொகையை சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுப்பதற்கும், திட மற்றும் திரவக் கழிவு நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கும் பயன்படுத்த மேற்கு வங்க அரசு தவறியுள்ளது.
அந்த நிதியைப் பயன்படுத்தி திடக்கழிவு மேலாண்மை வசதி களை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் அதைச் செய்ய மேற்கு வங்க அரசு தவறியுள்ளது. சுகாதார பிரச்சினைகளை நீண்ட காலத் துக்கு தள்ளிவைக்க முடியாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேற்கு வங்கத்தின் நகர்ப்புற பகுதிகளில் நாள்தோறும் 2,758 மில்லியன் லிட்டர் கழிவுநீர் வெளியேறுகிறது. ஆனால், மாநிலத்தில் கழிவுநீரை சுத்திகரிக்கும் திறன் 1,505.85 மில்லியன் லிட்டர் அளவுக்கு மட்டுமே உள்ளது. மேலும், அதில் நாள்தோறும் 1,268 மில்லியன் லிட்டர் கழிவுநீர் மட்டுமே சுத்திகரிக்கப்படுகிறது. இதனால் நாள்தோறும் 1,490 மில்லியன் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமலேயே நிலத் தில் விடப்படுகிறது. இது சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய கேடுகளை ஏற்படுத்தும்.
மத்திய நிதி
இந்தத் திட்டங்களுக்கு மத்திய நிதியைப் பெறுவதில் எந்த ஆட்சேபமும் இல்லை. இருந்தபோதும், மாநிலம் அதன் பொறுப்பைத் தவிர்க்கவோ அல்லது அதைக் காரணம் காட்டி திட்டத்தை தாமதப்படுத்தவோ முடியாது.
மேற்கு வங்க மாநிலத்தில் சுற்றுச்சூழலுக்கு சேதம் ஏற்படு வதைக் கருத்தில் கொண்டு, கடந்த கால விதிமீறல்களுக்கு இழப்பீடு அரசால் வழங்கப்பட வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம்.
2 மாத அவகாசம்
எனவே ரூ.,3,500 கோடி அபராதத்தை மாநில அரசுக்கு விதிக்கிறோம். இந்த நிதியை மேற்கு வங்க அரசு தனி நிதியாக அடுத்த 2 மாதங்களுக்குள் டெபாசிட் செய்ய வேண்டும். இந்த நிதியை செலுத்தத் தவறும்போது கூடுதலான அபராதம் விதிக்கும் நிலை ஏற்படும். இவ்வாறு நீதிபதி ஏ.கே. கோயல் தனது உத்தரவில் கூறியுள்ளார்.