திருச்சிற்றம்பலத்தை பாராட்டிய பிரமாண்ட இயக்குநர்…

இயக்குநர் செல்வராகவனிடம் உதவி இயக்குநராக இருந்தவர் மித்ரன் ஆர். ஜவஹர். இவர்,’யாரடி நீ மோகினி’, ‘குட்டி’ ‘உத்தம புத்திரன்’ உள்ளிட்ட படங்களை இயக்கி கவனம் ஈர்த்தவர். இவரும், தனுஷும் நீண்ட வருடங்கள் கழித்து  இணைந்த திரைப்படம் ‘திருச்சிற்றம்பலம்’. நித்யாமேனன், ராஷி கண்ணா, ப்ரியா பவானி சங்கர், பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் நடிப்பில் உருவான இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. அனிருத் இசையைமத்த இப்படம் கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

உலகளவில் 600 திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது. தமிழில் இதுபோன்று ஃபீல் குட் படம் வெளியாகி பல வருடங்கள் ஆகிவிட்டதாகவும், நித்யா மேனன் நடித்திருந்த ஷோபனா கதாபாத்திரம் கண்களில் ஒத்திக்கொள்ளும் அளவு அழகாக இருப்பதாகவும் பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்றது.

அதேபோல், படத்தில் நடித்த பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் என அனைவரும் தங்களது கொடுத்த கதாபாத்திரத்தை கனகச்சிதமாக செய்திருக்கின்றனர் எனவும் ரசிகர்கள் கூறினர். விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல்ரீதியாகவும் திருச்சிற்றம்பலம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுவரை அப்படம் 60 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.

நீண்ட நாள்கள் கழித்து தனுஷ் நடித்த படம் 50 கோடி ரூபாய் வசூலை தாண்டியிருப்பதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். மேலும், தனுஷ் திருச்சிற்றம்பலம் படம் மூலம் கம்பேக் கொடுத்திருக்கிறார். இனி அவர் தொட்டதெல்லாம் துலங்குமென்றும் அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறிவருகின்றனர்.

 

இந்நிலையில் இயக்குநர் சங்கர் திருச்சிற்றம்பலம் படத்தை பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “திருச்சிற்றம்பலம் அழகான திரைப்படம். அழகு என்பது வேதனையான தருணங்களைத் தொடர்ந்து வரும் அழகான தருணங்களில் உள்ளது. நித்யா மேனனின் கதாபாத்திரம் மற்றும் அவரது சிறப்பான நடிப்பு அத்துடன் மித்ரன் ஜவஹரின் எழுத்து மனதை கொள்ளை கொண்டது. தனுஷ் மற்றும் அனிருத் கூட்டணி வழக்கம் போல் சிறப்பாக உள்ளது. பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் மற்றும் முழு குழுவையும் நேசிக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.