ஏலகிரி: ஏலகிரி மலைகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிகளில் உதவி செயற்பொறியாளர் மற்றும் பொறியாளர்கள், ஆய்வு மேற்கொண்டனர். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏலகிரி மலை 14 கிராமங்களை உள்ளடக்கிய தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது. ஏலகிரி மலை தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. ஏலகிரி மலையில், நிலாவூர், மங்கலம், அத்தனாவூர், கொடையூர் ஆகிய பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. மேலும் இப்பள்ளிகள் அனைத்தும் இடிந்து விழும் அபாயம் உள்ளதாக தினகரன் நாளிதழில் செய்தி படம் வெளிவந்தது. இதன் எதிரொலியாக உதவி செயற்பொறியாளர், பொறியாளர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் சேதம் அடைந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள் அனைத்தையும் உடனடியாக செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கூறியுள்ளனர். அத்தனாவூர் பகுதியில் அமைந்துள்ள பழைய சேதம் அடைந்த தண்ணீர் தொட்டி, ஏலகிரி மலைப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையங்கள், பழத்தோட்டம் பகுதியில் பால் சொசைட்டி அமைப்பது குறித்தும், பொறியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன், வார்டு உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் கோவிந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டு ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் மூலம் ஏலகிரி மலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அனைத்தையும் சரி செய்யப்படும் என்றும், ஆய்வு செய்து சுவரில் வளர்ந்த செடிகள், மற்றும் மழை பெய்தால் மழை நீர் பள்ளி அறையனுள் வராதபடி சரி செய்யப்படும் என்றும் தெரிவித்தனர். எனினும் பள்ளியில் படிக்கும் மாணவர்களும், பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் விரைவில் புதிய கட்டிடம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.