தேவாரம்: தேனி மாவட்டத்தில் ஆன்லைன் விற்பனை மூலம் மிக தாராளமாக புழங்கும் போதை ஊசி, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களால் இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, தேனி மாவட்ட எஸ்.பி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக-கேரளா மாநில எல்லையோரங்களை இணைக்கும் ஊர்களாக உத்தமபாளையம், தேவாரம், கம்பம், கூடலூர், போடி, கோம்பை என ஊர்கள் உள்ளது. இந்த எல்லையோர பகுதிகளில் போலீசாரின் கழுகு பார்வையை மீறி சட்டவிரோத தொழில்கள் றெக்கை கட்டி பறக்கிறது. இதில் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் சம்பவங்களும் அவ்வப்போது நடக்கிறது. மூளையை அடிமையாக்கி, குடும்பத்தை சீரழிக்கும் போதை ஊசி விற்பனை தேனியை மையமாக வைத்து நடந்த வருகிறது. இதில் சின்னமனூர் போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் மிகப்பெரிய ‘நெட் ஒர்க்’ சிக்கியது. பிடிபட்டவர்கள் எல்லாம் 18 வயதினை கடந்த இளைஞர்கள் என்பது கவலைக்குரிய விஷயம்.
இணையம் வளரும் இந்தியாவில் சட்டவிரோத செயல்களும் வளர்ந்து வருவது போலீஸ் வட்டாரத்தையே திக்குமுக்காட வைத்துள்ளது. போலீசார் விசாரணை தீவிரமாகும் பட்சத்தில் தேனி மாவட்டத்தில் உள்ள போதை பொருள் சப்ளையர்கள் சிக்க வாய்ப்புள்ளது. தேனி மாவட்ட அடர்ந்த மலைப்பகுதிகளில் ஒரு காலத்தில் கஞ்சா வளர்ப்பு தோட்டங்கள் இருந்தன. போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கையால், கஞ்சா விவசாயம் அடியோடு அழிக்கப்பட்டது. அதே நேரத்தில் வளர்ந்து விட்ட, தொலைத்தொடர்பு வளர்ச்சி, கஞ்சாவை தேனி மாவட்டத்திற்குள் மிக எளிதாக கொண்டு வருகிறது. கஞ்சா விற்பனையாளர்கள் ஆந்திராவில் இருந்து நவீன முறையில் ‘டிப் டாப்’ ஆசாமிகளாக மாறி கஞ்சாவை கடத்தி வருகின்றனர். இதற்கென செல்போன்களில் தனி கோடு வேர்ட் பயன்படுத்தப்படுகிறது.
விரைவு பஸ்கள், ஆம்புலன்ஸ், புக்கிங் டாக்ஸி, பெரும் சரக்கு வாகனங்கள் என போலீசாரே கண்டுபிடிக்க முடியாதபடி தேனி, கம்பம், போடி என இதன் தொழில் தடையின்றி நடக்கிறது. போதைக்கு அடிமையாக உள்ள 18 வயது இளைஞர்கள், கஞ்சா விற்பனையின் தூதராக மாறி செயல்படுவதும், அண்டை மாநிலமான கேரளாவிற்கு, கம்பம், போடி மலைப்பாதை வழியே கடத்துவதும் அதிகரிக்கிறது. கல்லூரி மாணவர்கள், பள்ளிகளில் படிக்கும் போதை மாணவர்கள் இதன் அடிமையாக கிடப்பதால், போலீசார் மாவட்டம் முழுவதுமே தடுக்க முடியாமல் திண்டாடுகின்றனர். எனவே, கஞ்சா விஷயத்தில் தனி கவனம் செலுத்திட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இவை தவிர பள்ளிகள், கல்லூரிகளுக்கு பக்கத்தில் சர்வ சாதாரணமாக தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை நடக்கிறது. இதனை விற்பவர்களுக்கு, ஒரு சில போலீசாரின் ஆதரவும் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. எத்தனை தனிப்படைகள் வைத்து குட்கா விற்பனையை தடுக்க முயன்றாலும் முடியாத நிலை தொடர்கிறது. கேரளா எல்லையை ஒட்டி உள்ள ஊர்களில் இருந்து சாதாரணமாக குட்கா கடத்தலும் நடக்கிறது. கஞ்சா கடத்தி வரும் கும்பல்கள் கடந்த 4 வருடத்திற்கு அடக்கி வைக்கப்பட்டு இருந்தனர். தினமும் ரெய்டுகள் நடந்தன. கம்பம், உள்ளிட்ட நகரங்களில் மொத்தமாக, கஞ்சா பறிமுதல் நடந்தது.
இப்போது ஏனோ தானோ என நடவடிக்கைகள் உள்ளன. இதன் தாக்கம்தான் இன்று போதை ஊசி கும்பல் பெருகியதும், தடையின்றி சட்டவிரோத தொழில் நடப்பதும். எனவே, உடனடியாக கண்காணிப்பதும், கடிவாளம் போடுவதும் அவசியம் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘தேனி மாவட்டம் சிறிய மாவட்டமாக இருந்தாலும், பக்கத்தில் உள்ள கேரளாவில் தடைசெய்யப்பட்ட எல்லாமும் இங்கிருந்து அனுப்பி வைக்கப்படுகிறது. குறிப்பாக கஞ்சா கடத்தல், தடை செய்யப்பட்ட புகையிலை, போதை மாத்திரைகள், ஊசிகள் என தடையின்றி செல்கிறது. இதனை தடுப்பதற்கு என தனி டீம் இருந்தாலும், இவர்களுக்கு டேக்கா கொடுத்து அத்துமீறல்கள் அரங்கேறுகிறது. உடனடியாக எல்லைப்பகுதிகளை கண்காணிப்பதை விட்டு விட்டு, உள்ளூர் சோர்ஸ் மூலம் நெம்பர் டூ பிசினஸ் செய்பவர்களை லாக் செய்தால்தான் தடுக்க முடியும். தனி நபர்கள் சுயநலத்தால் போதைக்கு அடிமையாகிப் போன இளைஞர்கள் வாழ்வு மீட்கப்பட வேண்டும். இதற்கு தேனி மாவட்ட எஸ்.பி. கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’ என்றனர்.