சென்னை : அடுத்தடுத்த முன்னணி நடிகர்களின் படங்களை தமிழகத்தில் வெளியிட்டு வருகிறது உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ்.
சமீபத்தில் வெளியான விக்ரம், கோப்ரா, டைரி என அடுத்தடுத்த முன்னணி நடிகர்களின் படங்களை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட்டது.
தொடர்ந்து அடுத்ததாக வெந்து தணிந்தது காடு, கேப்டன், விடுதலை என மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களையும் வெளியிட உள்ளது.
ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம்
நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி தன்னுடைய தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் மூலம் படங்களை தயாரித்தும் விநியோகித்தும் வருகிறார். சமீப காலங்களில் இவர் அதிகமான படங்களின் தமிழக வெளியீட்டு உரிமையை தொடர்ந்து பெற்று ரிலீஸ் செய்து வருகிறார்.

தமிழக வெளியீட்டு உரிமை
முன்னதாக குருவி, ஆதவன், விண்ணைத் தாண்டி வருவாயா போன்ற படங்களை தயாரிக்கவும் செய்தார். மேலும் தொடர்ந்து தான் நடித்த படங்களையும் இவர் தயாரித்தார். சமீப காலங்களில் அதிகமான படங்களை ரெட் ஜெயண்ட் மூவிஸ் தமிழகத்தில் வெளியிட்டு வருகிறது.

அடுத்தடுத்த படங்கள்
அந்த வகையில் கமல்ஹாசனின் விக்ரம், சிவகார்த்திகேயனின் டான், விஜய் சேதுபதியின் காத்து வாக்குல ரெண்டு காதல், விக்ரமின் கோப்ரா, அருளிநிதிநியின் டைரி போன்ற படங்களை வெளியிட்டது. தொடர்ந்து அடுத்தடுத்து சிம்புவின் வெந்து தணிந்தது காடு, ஆர்யாவின் கேப்டன் மற்றும் வெற்றிமாறனின் விடுதலை போன்ற படங்களின் வெளியீட்டு உரிமையையும் கைப்பற்றியுள்ளது.

நாளை அடுத்த அறிவிப்பு
இந்நிலையில் தற்போது ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், நாளை காலை 10 மணிக்கு புதிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளது. இது எந்தப் படமாக இருக்கும் என்று ரசிகர்களை யோசித்துவரும் நிலையில், இந்த அறிவிப்பின்கீழ் சுடச்சுட காபி கோப்பையை வைத்துள்ளது.

காபி வித் காதல்?
அதனால் இது சுந்தர் சியின் காபி வித் காதல் படத்தின் அறிவிப்பாக இருக்கலாம் என்று ரசிகர்கள் யூகித்துள்ளனர். சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 3 படத்தை தொடர்ந்து ரொமாண்டிக் காமெடி படமாக காபி வித் காதல் படத்தை இயக்கி முடித்துள்ளார் சுந்தர் சி. இந்தப் படத்தை அவரது அவ்னி கிரியேஷன்ஸ் நிறுவனம் பென்ஸ் மீடியாவுடன் இணைந்து தயாரித்துள்ளது.

நட்சத்திரப் பட்டாளம்
ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், அம்ரிதா ஐயர், மாளவிகா ஷர்மா, சம்யுக்தா ஷண்முகம், ரைசா, ஐஸ்வர்யா தத்தா, தொகுப்பாளர் டிடி, ரெடின் கிங்ஸ்லி என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள், பர்ஸ்ட் லுக் உள்ளிட்டவை வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.