நெல்லை: அதிக அளவில் மாணவ- மாணவிகள் விண்ணப்பித்த கலை, அறிவியல் கல்லூரிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நெல்லை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் இந்த ஆண்டு கூடுதலாக 196 மாணவிகள் இளங்கலை பயில வாய்ப்பு கிடைத்துள்ளது. இதுபோல் மானூர் புதிய அரசு கல்லூரியிலும் கூடுதல் மாணவ, மாணவிகள் சேர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் சுயநிதி கலை, அறிவியல் கல்லூரிகளில் பயில்வதற்கு இந்த ஆண்டும் வழக்கம்போல் அதிக அளவில் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். பல கல்லூரிகளில் ஒதுக்கப்பட்ட இடம் முன்னதாக நிறைவு பெற்றதால் இடம் கிடைக்காமல் இருந்த மாணவ- மாணவிகள் கவலையில் இருந்தனர்.
இந்த நிலையில் 2022-23ம் கல்வியாண்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கலைப்பாடப்பிரிவுகளில் கூடுதலாக 20 சதவீதமும், அறிவியல் பாடப்பிரிவுகளில் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழக அனுமதி பெற்று ஆய்வக வசதிக்கு ஏற்ப கூடுதலாக 20 சதவீதமும் மாணவர் சேர்க்கை நடத்தலாம் என உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். இதுபோல் அரசு உதவிபெறும் கலை அறிவியல் கல்லூரிகளில் அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் 15 சதவீதமும், சுயநிதி கலை அறிவியல் மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் 10 சதவீதமும் கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு கலை அறிவியல் கல்லூரிகள் நடவடிக்கை எடுத்துள்ளன. நெல்லையில் அதிக மாணவிகள் பயிலும் ராணி அண்ணா அரசு மகளிர் கலைக்கல்லூரியில் முதலாண்டு அனைத்து பாடப் பிரிவுகளிலும் ஏற்கனவே 1176 மாணவிகள் சேர்ந்து இடங்கள் நிரம்பி விட்டன.
இந்த நிலையில் புதிய அனுமதி உத்தரவுப்படி இக்கல்லூரியில் 196 மாணவிகள் கூடுதலாக பயில வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால் காத்திருப்பு பட்டியலில் இருந்த மாணவிகள் இந்த புதிய இடங்களில் சேர்க்கப்பட உள்ளனர். இதற்கான அனுமதியை நெல்லை பல்கலைக்கழகத்தில் கல்லூரி முதல்வர் மைதிலி கேட்டுள்ளார். வருகிற புதன்கிழமைக்குள் கூடுதல் இடங்களுக்கான சேர்க்கை பணிகள் நிறைவுபெற வாய்ப்புள்ளதாக கல்லூரி வட்டாரங்கள் தெரிவித்தன. இதுபோல் நெல்லை மானூரில் இந்த ஆண்டு புதியதாக அரசு கலைக்கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. மேலப்பிள்ளையார்குளத்தில் தற்காலிகமாக கல்லூரி முதலாண்டு வகுப்புகள் நடக்கின்றன. இந்த கல்லூரியிலும் 20 சதவீத மாணவ- மாணவிகள் கூடுதலாக சேர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.