புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் 40 மாடிகள் கொண்ட இரட்டை அடுக்குமாடி குடியிருப்பை, சூப்பர் டெக் நிறுவனம் கட்டியது. இது விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதால், அவற்றை இடிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, கடந்த மாதம் 28ம் தேதி 3,700 கிலோ வெடிமருந்தை பயன்படுத்தி 12 நொடிகளில் இந்த கட்டிடம் தரைமட்டமாக்கப்பட்டது. இதனால், ரூ.500 கோடி இழப்பு ஏற்பட்டதாக சூப்பர் டெக் நிறுவனம் கூறி உள்ளது. இந்நிலையில், இடிக்கப்பட்ட அதே திட்டத்தில் புதிய குடியிருப்பு கட்டிடத்தை கட்டப் போவதாக சூப்பர்டெக் நிறுவனம் அறிவித்துள்ளது.
இது குறித்து இந்நிறுவன தலைவர் அரோரா கூறுகையில், ‘குரூப் ஹவுசிங் திட்டத்தின் வளர்ச்சிக்காக நொய்டா செக்டார்-93ல் எங்களுக்கு 14 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. மொத்த நிலப்பரப்பில், இடிக்கப்பட்ட இரட்டை கோபுரங்கள் 2 ஏக்கரில் கட்டப்பட்டது. இதே இடத்தில் புதிய குடியிருப்பை கட்டுவதற்கான திட்டத்தை நிறைவேற்றுவோம். இதற்கு அனுமதி வழங்காவிட்டால், இந்த நிலத்துக்காக சூப்பர்டெக் வழங்கிய பணம் திரும்பப் பெறப்படும். இந்த நிலத்தின் தற்போதைய விலை ரூ.80 கோடி,’ என தெரிவித்தார்.