திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வெள்ளிக்கிழமைகளில் அபிஷேக சேவைக்கு பிறகு சுவாமிக்கு புதிய வஸ்திரம் சமர்ப்பிக்கப்படுவது வழக்கம். இந்த சேவையில் 2 பேர் பங்கேற்பதற்காக சேலம் அழகாபுரத்தை சேர்ந்த ஹரிபாஸ்கர் என்பவர் கடந்த 2006 ஜூன் 27ம் தேதி, தேவஸ்தானத்துக்கு ரூ12,250 செலுத்தி பதிவு செய்தார். அப்போது, அவருக்கு 2020 ஜூன் 7ம் தேதி தரிசனம் செய்ய தேதி ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர், ஆர்ஜித சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.
இதனால், முன்பதிவு செய்த பக்தர்களை அதற்கு பதிலாக வேறு விஐபி தரிசனத்தில் அனுமதிப்பதாகவும், இதற்கான தேதி தரும்படியும் கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால், பணம் கட்டி 16 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் தரிசனத்திற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால், திருப்பதி தேவஸ்தானத்தில் சேவை குறைபாடு உள்ளதாக சேலம் நுகர்வோர் நீதிமன்றத்தில் ஹரிபாஸ்கர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தேவஸ்தானம் ரூ45 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று சேலம் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.