காரைக்கால்: புதுச்சேரி காரைக்கால் பகுதியில் தன் மகளுடன் படிக்கும் சக மாணவனுக்கு விஷம் கொடுத்ததில் மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
படிப்பு போட்டி காரணமாக மாணவனுக்கு விஷம் கொடுக்கப்பட்டது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்த நிலையில், தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது மகளைவிட சக மாணவன் நன்றாக படிக்கிறான் என்பதற்காக விஷம் கொடுத்து மாணவனை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாந்தி மயக்கம்
புதுச்சேரி காரைக்கால் நேருநகர்ப் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார் அதே பகுதியை சேர்ந்த மாணவர் ஒருவர். இவர் நேற்று வழக்கம்போல பள்ளிக்கு சென்றுள்ளார். பள்ளியின் ஆண்டு விழா என்பதால் அரைநாள் மட்டுமே பள்ளி செயல்பட்டுள்ளது. எனவே பிற்பகல் வீட்டிற்கு வந்த மாணவனுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மாணவனை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
விசாரணை
பரிசோதித்து பார்த்ததில் மாணவனுக்கு விஷம் கொடுக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, மாணவன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மறுபுறத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டனர். விஷம் குளிர்பானத்தில்தான் கலந்து கொடுக்கப்பட்டது என்பதால், அதை யார் கொடுத்தார்கள் என விசாரித்ததில் பள்ளியின் வாட்ச்மேன்தான் அதை செய்தது என்பது உறுதி செய்யப்பட்டது. எனவே காவலாளியிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
உயிரிழப்பு
அப்போதுதான் உண்மை தெரிய வந்துள்ளது. அதாவது காவலாளியிடம் ஒரு பெண்மணி வந்து குளிபானத்தை கொடுத்து அதை மாணவனிடம் கொடுக்க சொல்லியதாக கூறியுள்ளார். இதை கேட்ட காவலாளியும், அதை மாணவனுக்கு கொடுத்துள்ளார். இதனை அருந்திய மாணவனுக்கு உடல் நகலக்குறைவு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவன் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சிசிடிவி
இதனையடுத்து காவல்துறையினர் அந்த பெண்ணை விசாரித்து வருகின்றனர். விசாரணையில் தான் பிஸ்கெட் மட்டுமே கொடுத்ததாகவும், குளிர்பானம் எதையும் கொடுக்கவில்லையென்றும் அப்பெண்மணி கூறியுள்ளார். ஆனால் பள்ளியின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் அந்த பெண்மணி பள்ளி காவலாளியிடம் குளிர்பானத்தை கொடுத்துள்ளது தெரியவந்தது. இதனையடுத்து விசாரணையை காவல்துறை தீவிரப்படுத்தியதில் அப்பெண்மணி உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.
சாலை மறியல்
அதாவது தனது மகளைவிட இந்த மாணவன் நன்றாக படிப்பதால்தான் மாணவனுக்கு விஷம் கொடுத்துள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இவர் சில நாட்களாக இது குறித்து பிரச்னையில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவன் உயிரிழந்துள்ள நிலையில், சரியான சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி மாணவனின் உறவினர்கள் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.