பழநி: பழநி அருகே தொடர் மழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சில கிராமங்கள் முழுமையாக துண்டிக்கப்பட்டன. திண்டுக்கல் மாவட்டம், பழநி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பழநி பகுதியில் உள்ள கண்மாய்கள் மற்றும் அணைகள் நிரம்பி வழிகின்றன. அணைகளில் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால் ஆறுகளின் கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பழநி அருகே நெய்க்காரப்பட்டி உடையார்குளம் நிரம்பி கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த தண்ணீர் தாமரைக்குளம் பகுதியில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அப்பகுதியில் சாலைகள் பலத்த சேதம் அடைந்துள்ளன.
மேலும் அதிக அளவு தண்ணீர் செல்வதால் இப்பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் ராசாபுரம், தாமரைக்குளம், கரிகாரன்புதூர், ஓட்டணை புதூர் கிராமங்கள் தனித்தீவுகளாக மாறியுள்ளன.
போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் குக்கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அத்தியாவசியத் தேவைகளுக்காக கூட நகருக்கு வருவதற்கு பல கிமீ தூரம் சுற்றி வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.