லாகூர்,
பாகிஸ்தானில் பெய்து வரும் பருவகால மழை பாதிப்புகளால் பெருவெள்ளம் ஏற்பட்டு அந்நாடு நீரில் தத்தளித்து வருகிறது. 3.3 கோடி பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 5 லட்சத்திற்கும் கூடுதலானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
வரலாறு காணாத வெள்ள பாதிப்புகளால் 3-ல் ஒரு பங்கு நாடு நீரில் மூழ்கி போயுள்ளது. வெள்ள நீரில் லட்சக்கணக்கான ஏக்கரிலான பயிர்களும், கால்நடைகளும் அடித்து செல்லப்பட்டு உள்ளன. உணவு பற்றாக்குறையும் ஏற்பட்டு உள்ளது.
1,200 பேர் உயிரிழந்து உள்ளனர். அவர்களில் 400 பேர் குழந்தைகள் ஆவர். பாகிஸ்தானில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட அமெரிக்காவை சேர்ந்த 5 பேர் கொண்ட குழு ஒன்று சென்றுள்ளது.
பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதர் டொனால்டு புளோம் உள்ளிட்டோரை கொண்ட இந்த குழு சிந்த் மாகாணத்தின் டாடு மாவட்டத்திற்கு சென்று வெள்ள நிலைமையை நேரில் ஆய்வு மேற்கொண்டது. வான்வழியேயும் சென்று பார்வையிட்டது.
இதில், மீட்பு பணிகள் மற்றும் வெள்ளத்தில் ஏற்பட்ட இழப்புகள் பற்றி குழுவினருக்கு அதிகாரிகள் விரிவாக விளக்கினர். வெள்ளம் பாதித்த மக்களையும் நேரில் சந்தித்த அமெரிக்க பிரதிநிதிகள் சபையை சேர்ந்த பெண் தலைவர் ஷீலா ஜாக்சன் லீ, அவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
அமெரிக்கா கடந்த வாரம், பாகிஸ்தானுக்கு மனிதநேய உதவியாக கூடுதலாக ரூ.239 கோடியை அறிவித்தது. பாதிக்கப்பட்ட சமூகத்தினருக்கு நேரடியாக உதவி சென்று சேரும் வகையில், ஆதரவு நிதியாக இந்த மாத தொடக்கத்தில் மானிய அடிப்படையில் ரூ.87.6 கோடியை அமெரிக்கா வழங்கியது.