காந்தி நகர்: பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்திலேயே பாஜக தோல்வி அடையும் எனத் தெரிவித்துள்ள ஆம் ஆத்மி அரவிந்த் கெஜ்ரிவால், அதற்கான காரணத்தையும் குறிப்பிட்டுள்ளார்.
குஜராத் மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 30 ஆண்டுகளாகவே குஜராத்தில் பாஜக தான் ஆட்சியில் உள்ளது.
கடந்த 2017 தேர்தலிலேயே கூட பாஜகவால் 182 இடங்களைக் கொண்ட குஜராத் சட்டசபையில் பாஜகவால் 99 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த முறை ஆட்சியைத் தக்க வைப்பது பாஜகவுக்குக் கஷ்டமாகவே இருக்கும்.
ஆம் ஆத்மி
அங்குக் காங்கிரஸைத் தாண்டி இப்போது ஆம் ஆத்மியும் வளர்ந்து வருகிறது. டெல்லிக்கு வெளியே பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஏற்கனவே இந்தாண்டு தொடக்கத்தில் ஆட்சியைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து மற்ற மாநிலங்களிலும் கட்சியை விரிவுபடுத்த ஆம் ஆத்மி முயல்கிறது. அதன்படி குஜராத்தில் ஆம் ஆத்மிக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ச்சியாகப் பிரசாரம் செய்து வருகிறார்.
அரவிந்த் கெஜ்ரிவால்
இந்நிலையில், குஜராத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் மோடியின் சொந்த மாநிலத்தில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற அச்சம் பாஜகவுக்கு உள்ளதாகத் தெரிவித்தார். மாநிலத்தில் அதிகரிக்கும் ரவுடித்தனம் காரணமாக மக்கள் கடும் கோபத்தில் உள்ளதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
நமது கலாச்சாரம் இல்லை
அவர் மேலும், “குஜராத்தில் 6 கோடி மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். ஆம் ஆத்மியின் முக்கிய தலைவர் மனோஜ் தாக்கப்பட்டு உள்ளார். சாமி முன்னால் இந்த கொடூர தாக்குதலை அவர்கள் நடத்தி உள்ளனர். இது நம் நாட்டின் கலாசாரம் அல்ல. இது இந்து கலாச்சாரம் அல்ல. இது குஜராத்தின் கலாச்சாரம் அல்ல. தாக்குதல் நடத்தப்பட்ட இடமான சூரத் மக்களும் இந்த விவகாரத்தில் கோபத்தில் உள்ளனர்.
வெற்றி
சூரத்தில் நாங்கள் வாக்கெடுப்பு நடத்தினோம். அதில் மொத்தம் 12 இடங்களில் ஆம் ஆத்மி 7 இடங்களில் வெல்லும் எனத் தெரிய வந்துள்ளது. தோல்வி உறுதியான பின்னர் இப்படித்தான் செய்வார்கள். நான் பாஜகவிடம் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இத்தனை காலம் அவர்கள் காங்கிரஸைத் தான் எதிர்கொண்டனர். ஆனால் நாங்கள் காங்கிரஸ் அல்ல. நாங்கள் சர்தார் படேல் மற்றும் பகத் சிங் மீது நம்பிக்கை கொண்டுள்ளோம். நாங்கள் பயப்படவில்லை, நாங்கள் போராடுவோம்.
பிரசாரம்
குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சியை ஊடகங்கள் இருட்டடிப்பு செய்ய பாஜக அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆம் ஆத்மி கட்சியினருடன் பேச வேண்டாம் என்றும், அவர்களை விவாதத்திற்கு அழைக்க வேண்டாம் என்றும் ஊடகங்களை அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இதனால் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தி பிரசாரம் செய்து வருகிறோம்” என்று அவர் தெரிவித்தார். குஜராத்தில் பாஜகவை வீழ்த்த அரவிந்த் கெஜ்ரிவால், தீவிர பிரசாரம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.