ஜார்கண்ட் மாநிலம், தும்கா மாவட்டத்தில் கடந்த வெள்ளியன்று போலீஸாரால், பழங்குடியினத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி, மரக்கிளை ஒன்றில் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. முதலில் இது கொலையா அல்லது தற்கொலையா எனச் சந்தேகப்பட்ட போலீஸார், மீட்கப்பட்ட சிறுமியின் உடலைப் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அதைத் தொடர்ந்து சிறுமியின் தாயாரும், தன்னுடைய மகளை யாரோ பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்ததாக போலீஸிடம் கூறிவந்தார்.
பின்னர் பிரேத பரிசோதனையிலும், அந்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்குள்ளாகியிருப்பது உறுதியானது. மேலும் இந்த விவகாரத்தில், அர்மான் அன்சாரி என்பவர் சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தைகள் கூறி அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட அர்மான் அன்சாரியை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.
இதுகுறித்து ஊடகத்திடம் பேசிய டி.ஐ.ஜி சுதர்ஷன் மண்டல், “கடந்த வெள்ளியன்று சிறுமியின் உடல் சடலமாக மீட்கப்பட்டபோது முதலில் சரியாக அடையாளம் காணப்படவில்லை. பின்னர் மைனர் என அறியப்பட்ட இந்த சிறுமி, பிரேத பரிசோதனையில் கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து இதில் குற்றம்சாட்டப்பட்ட அர்மான் அன்சாரி போலீஸாரால் கைதுசெய்யப்பட்டார். கைதுசெய்யப்பட்ட நபர்மீது, இந்திய தண்டனைச் சட்ட பிரிவு 302, 376, 201, போக்சோ சட்டத்தின் பிரிவு 4 மற்றும் எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. மேலும் இதில் அடுத்தகட்ட விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது” என்றார்.
இது குறித்து ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் மற்றும் பா.ஜ.க தலைவர் பாபுலால் மராண்டி, “தும்கா-வின் இந்தச் செய்தி எங்கள் ரத்தத்தை கொதிக்க வைக்கிறது. இதில் அர்மான் அன்சாரி கைதுசெய்யப்பட்டிருக்கிறார். இருப்பினும், இன்னும் எத்தனை பழங்குடியின சிறுமிகள் இதுபோன்ற அரக்கர்களால் கொல்லப்படுவார்கள்” என ட்விட்டரில் கண்டனம் தெரிவித்திருந்தார்.