தமிழகத்தில் பிரிவினைவாதம் பேசக்கூடிய ஆட்சியாக திமுக ஆட்சி உள்ளது என விமர்சித்துள்ளார் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை.
திருப்பூரில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டு வந்தது. நான்காவது நாளான இன்று மாநகரம் முழுவதும் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சாமலாபுரம் குளத்தில் கரைக்கப்பட்டது. அதற்கு முன்னதாக ஆலங்காடு பகுதியில் விநாயகர் சதுர்த்தி மக்கள் எழுச்சி விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் .
அப்போது பேசிய அவர் கேரளாவிள் தென்னிந்திய முதலமைச்சர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி பற்றி பேசியிருக்கிறார். 2004 – 2014 மத்தியில் கூட்டாட்சியின் போது இந்தியா பின்னோக்கி சென்றது .கொள்ளையடிப்பதற்காகவே கூட்டாட்சி கொள்கை. 2014 ஆம் ஆண்டு முதல் 8 ஆண்டுகளில் பெரும்பான்மையோடு ஒரு கட்சி ஆட்சி செய்ததால் சுயசார்பு பாரதம் சாத்தியமானது. மாநிலத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் மற்ற மத நிகழ்வுக்கு முதல் நபராய் வாழ்த்து சொல்லும் அவர் இந்துக்களின் பண்டிக்கைக்கு வாழ்த்து சொல்லாமல் மவுனம் காப்பதுதான் மதச்சார்பா? ஆனால் பிரதமர் மோடி இஸ்லாமிய பண்டிகை , கிறிஸ்துவ பண்டிகை என அனைத்து மதத்தினருக்கு வாழ்த்தை சொல்லுகிறார். ஆனால் அவரைப்பார்த்து ஒரு மதத்திற்காக ஆட்சி செய்வதாக ஸ்டாலின் கூறுகிறார்.
இந்தியாவிலேயே ராமர் கோவிலுக்கு அதிக நிதி கொடுத்த 3 மாநிலங்களில் தமிழகம் உள்ளது. இது ஆன்மீக பூமியாகவே இருக்கிறது. மக்களுக்கான ஆட்சியாக இந்து வாழ்வியல் முறையிலான ஆட்சி தேவைப்படுகிறது. யோகா, ஆயூர்வேதம் , சித்தா என கொண்டு வந்த பிறகு நம் இந்து வாழ்வியல் முறையை முறியடிக்க ANTI hindu aliance என்பது அமெரிக்காவில் உருவாக்கப்பட்டு பத்திரிகைகளில் இந்திய அரசுக்கு எதிராக எழுதி வருகின்றனர்” என குற்றம் சாட்டினார். இந்த பொதுக்கூட்டத்தில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்ரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதன் பிறகு திருப்பூர் மாநகரில் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் சாமளாபுரம் குளத்தில் கரைப்பதற்காக கொண்டு செல்லப்பட்டது. இதற்காக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.
இதையும் படிக்க: ராகுல் காந்தியின் நடைபயணம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – கேஎஸ்.அழகிரி நம்பிக்கைSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM