ஆரோக்கியமான உணவு சாப்பிடுவது மிகவும் அவசியம். உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்காத உணவு சாப்பிட வேண்டும். அன்றாட உணவு ஊட்டச்சத்து நிறைந்ததாக இருக்க வேண்டும். உணவில் காய்கறிகள் கட்டாயம் சேர்க்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர். அந்தவகையில், கொடியில் வளரும் காய்களில் ஊட்டச்சத்து நிறைந்துள்ளது. பொதுவாக சில காய்களில் மேல்தோல் சீவி அகற்றிவிட்டு சமைப்போம். சில காய்கறிகளில் அப்படியே சேர்த்து சமைப்போம். அதுபோல், பீர்க்கங்காயையும் தோல் சீவி விட்டு சமைப்போம். ஆனால் பீர்க்கங்காய் தோலில் சத்து உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். பீர்க்கங்காய் தோலில் துவையல் செய்து சாப்பிடலாம். எப்படி செய்வது என்று இங்கு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பீர்க்கங்காய் தோல்- 1 கப்
காய்ந்த மிளகாய் – 10
உளுந்தம் பருப்பு – 50 கிராம்
கடலை பருப்பு- 50 கிராம்
உப்பு- தேவையான அளவு
வெங்காயம்- 1
தேங்காய் துருவல்- 2 ஸ்பூன்
புளி- சிறிதளவு
எண்ணெய்- 2 ஸ்பூன்
செய்முறை
முதலில் பீர்க்கங்காயை கழுவி தோல் சீவி தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது ஒரு கடாயில் உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு மற்றும் காய்ந்த மிளகாய் மூன்றையும் சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு, அதே கடாயில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன் பீர்க்கங்காய் தோல், வெங்காயம், துருவிய தேங்காய் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவை சேர்த்து நன்றாக 10 நிமிடம் வதக்கி கொள்ளவும்.
இரண்டு கலவையும் சூடு ஆற வைத்த பின்னர் மிக்ஸியில் போட்டு தேவையான அளவு தண்ணீர் விட்டு அரைக்கவும். அவ்வளவு தான், 10 நிமிடத்தில் சுவையான பீர்க்கங்காய் தோல் துவையல் தயார். இதை சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். அல்லது இட்லி,தோசை என டிபனுடன் சேர்த்தும் சாப்பிடலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”