மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று நிகழ்ந்த சாலை விபத்தில் டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி (வயது 54) உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2012-ல் டாடா சன்ஸ் குழுமங்களின் தலைவராக நியமிக்கப்பட்டார் சைரஸ் மிஸ்திரி. இந்த நியமனத்துக்கு பின்னர் 4 ஆண்டுகளில் சைரஸ் மிஸ்திரிக்கும் டாடா குழுமத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் டாடா குழுமத் தலைவர் பதவியில் இருந்து சைரஸ் மிஸ்திரி நீக்கப்பட்டார். இது மிகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சைரஸ் மிஸ்திரிக்கும் டாடா குழுமத்துக்கும் இடையே நீதிமன்றங்களில் வழக்குகள் நடைபெற்றன. ஒரு கட்டத்தில் ஒட்டுமொத்தமாக டாடா குழுமங்களில் இருந்து சைரஸ் மிஸ்திரி விலகியும் விட்டார்.
இந்நிலையில் குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து மகாராஷ்டிராவின் மும்பைக்கு 4 பேருடன் காரில் சைரஸ் மிஸ்திரி பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது சைரஸ் மிஸ்திரியின் கார், டிவைடர் ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சைரஸ் மிஸ்திரி உட்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 2 பேர் ஆபத்தான நிலைமையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.