இம்பால்: மணிப்பூரில் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) கட்சியின் 5 எம்எல்ஏக்கள் நேற்று முன்தினம் அக்கட்சியை விட்டு விலகி பாஜகவில் இணைந்தனர்.
மணிப்பூர் சட்டப்பேரவைக்கு இந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக 32 இடங்களுடன் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது. அக்கட்சியின் தலைவர் பிரேன் சிங், முதல்வராக பதவியேற்றார். பாஜகவின் கூட்டணிக் கட்சியான நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) 6 இடங்களில் வென்றது.
ஜேடியு தலைவரான நிதிஷ் குமார் பிஹாரில் கடந்த மாதம் பாஜகவுடனான தனது கூட்டணியை முறித்துக்கொண்டு லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் சேர்ந்து புதிய அரசு அமைத்து மீண்டும் முதல்வர் பதவியேற்றார். அப்போது, பிஹாரில் ஐஜத கட்சியை உடைக்க பாஜக முயற்சி மேற்கொண்டது என்று பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். மேலும், 2 நாட்களுக்கு முன்னர் தெலங்கானா முதல்வரும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவருமான சந்திரசேகர ராவ் பிஹார் வந்த போது அவருடன் ஒன்றாக பேட்டி அளித்தார்.
இந்நிலையில் மணிப்பூரில் நிதிஷ் கட்சியை சேர்ந்த ஜாய்கிசின் சிங், குர்சங்லூர் சனேட் அச்சப் உத்தின், தங்ஜாம் அருண்குமார், எல்.எம்.காட் ஆகிய 5 எம்எல்ஏக்கள் நேற்று முன்தினம் சட்டப்பேரவை சபாநாயகரை சந்தித்தனர். அரசியலமைப்பு சட்டத்தின் 10-வது அட்டவணைப்படி தாங்கள் பாஜகவில் இணைவதாக தெரிவித்தனர். இதனை சபாநாயர் ஏற்றுக்கொண்டு இணைப்பை அங்கீகரித்துள்ளதாக மாநில சட்டப்பேரவை செயலகம் தெரிவித்துள்ளது.
இந்த 5 எம்எல்ஏக்களும் ஜேடியு தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க நேற்று பாட்னா வர திட்டமிட்டிருந்த நிலையில் அதற்கு முதல்நாள் பாஜகவில் இணைந்துள்ளனர்.
வரும் 2024-ம் ஆண்டு தேர்தலில் நிதிஷ் குமார் தேசிய அரசியலில் ஈடுபடும் திட்டம் இருப்பதாக கூறப்படும் நிலையில் அவரது கட்சிக்கு இது பின்னடைவாக கருதப்படுகிறது.
அருணாச்சல பிரதேசத்தில் கடந்த 2020 டிசம்பரில் ஜேடியு-வின் 7 எம்எல்ஏக்களில் 6 பேர் அக்கட்சியை விட்டு விலகி பாஜகவில் இணைந்தனர். எஞ்சியஒரு எம்எல்ஏ கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி பாஜகவில் இணைந்தார். நாகாலாந்திலும் ஜேடியு-வின் ஒரே எம்எல்ஏ கடந்த சில ஆண்டு களுக்கு முன் பாஜகவில் இணைந்தார்.
தற்போது மணிப்பூரில் 5 எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந் துள்ள நிலையில் ஒட்டுமொத்த வடகிழக்கு பிராந்தியத்தில் ஜேடியு-வின் பலம் 1 ஆக சுருங்கியுளது.
இந்நிலையில் பாஜக எத்தகைய அரசியல் நெறிகளை பின்பற்றுகிறது என்பதையே மணிப்பூர் நிகழ்வு காட்டுகிறது என ஜேடியு தேசிய பொதுச் செயலாளர் அஃபக் அகமது கான் விமர்சித்துள்ளார்.