மாஸ்கோ: ரஷ்யாவில் கடந்த ஜனவரி மாதம் முதலே தொடர்ச்சியாக பல மர்மமான பல விஷயங்கள் அரங்கேறி வருகிறது.
உக்ரைன் மீது கடந்த பிப் மாதம் ரஷ்யா போரை ஆரம்பித்தது அனைவருக்கும் தெரியும். அப்போது தொடங்கி இந்தப் போர் சுமார் ஆறு மாதங்களைக் கடந்தும் தொடர்ந்து வருகிறது.
இந்தப் போர் பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டாலும் கூட, புதின் கடந்த சில மாதங்களாகவே இந்தப் போருக்கு தயாராகி வருவது தெரிந்த விஷயம் தான். இந்தப் போரால் ஒட்டுமொத்த உலகமே பாதிக்கப்பட்டு உள்ளது.
மரணம்
இதற்கிடையே மறுபுறம் கடந்த ஜனவரி மாதம் முதல் மட்டும் ரஷ்யாவில் உள்ள குறைந்தது ஆறு முக்கிய தொழிலதிபர்கள் தற்கொலை அல்லது மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்களில் ஆறு பேர் ரஷ்யாவின் இரண்டு பெரிய எரிசக்தி நிறுவனங்களுடன் தொடர்புடையவர்கள். அவர்களில் நான்கு ரஷ்ய அரசுக்குச் சொந்தமான எரிசக்தி நிறுவனமான காஸ்ப்ரோம் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் ஆவர்.
கருத்து
மற்ற இருவர் ரஷ்யாவின் மிகப்பெரிய தனியார் எண்ணெய் நிறுவனமான லுகோயிலுடன் தொடர்பு உடையவர்கள் ஆகும். பொதுவாக ரஷ்யாவில் இருக்கும் அனைத்து தனியார் நிறுவனங்களும் அந்நாட்டு அரசுக்கு எப்போதும் ஆதரவாகவே இருக்கும். ஆனால், இந்த ஆண்டின் தொடக்கத்தில், அந்த நிறுவனம் உக்ரைனுக்குப் போரில் ரஷ்யாவுக்கு எதிராகக் கருத்து கூறி இருந்தது. அதன் பின்னரே சர்ச்சை மரணங்கள் நடந்துள்ளன.
கடந்த வாரம்
லுகோயிலின் தலைவர் ரவில் மகனோவ் இந்த வாரம் மாஸ்கோவில் உள்ள மருத்துவமனையின் ஜன்னல் வழியாக விழுந்து உயிரிழந்தார் என்று அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியானது. இருப்பினும், அவரது மரணம் தொடர்பாக வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பில், அவர் உடல்நலக்குறைவு காரணமாகவே உயிரிழந்ததாகக் கூறப்பட்டு உள்ளது. மாடியில் இருந்து விழுந்தது தொடர்பான தகவல்கள் எதுவும் அதில் இல்லை.
உயிரிழப்பு
இதற்கு முன்பு, லுகோயில் உயர் பதவியில் இருந்த அலெக்சாண்டர் சுபோடின், கடந்த மே மாதம் மாஸ்கோ அருகே மந்திரவாதி ஒருவரைச் சந்தித்து உள்ளார். அதன் பின்னர் அவரை சுயநினைவு இல்லாத நிலையிலே போலீசார் கண்டுபிடித்தனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இதய செயலிழப்பால் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. தனியார்த் துறையில் இந்த இருவர் உயிரிழந்தனர் என்றால் அரசு எரிபொருள் நிறுவனத்தில் பணிபுரிந்த ஆறு முக்கிய அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.
அடுத்தடுத்து சர்ச்சை
ரஷ்யாவில் இந்த ஆண்டு ஏற்பட்ட முதல் சர்ச்சை மணம் என்றால் அது காஸ்ப்ரோமின் உயர்மட்ட நிர்வாகி லியோனிட் ஷுல்மேன். அவர் இந்தாண்டு ஜனவரி 20இல் லெனின்ஸ்கி கிராமத்தில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டது. அதற்கு ஒரு மாதத்திற்குப் பின்னர், மற்றொரு முக்கிய நிர்வாகி அலெக்சாண்டர் தியுலாகோவ் அதே கிராமத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவரும் தற்கொலை மூலமே உயிரிழந்தார்.
8 தொழிலதிபர்கள்
காஸ்ப்ரோம் நிறுவனத்தில் பணிபுரியும் மூன்று முக்கிய உயர் அதிகாரிகள், அடுத்தடுத்து தங்கள் குடும்பத்தினருடன் சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்கள் எப்படி உயிரிழந்தார்கள் என்பது குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் இல்லை. அதேபோல மற்றொரு தொழிலதிபரும் சர்ச்சையான முறையில் வீட்டிலேயே இறந்து கிடந்தார். இப்படி ரஷ்யாவில் மொத்தம் 8 தொழிலதிபர்கள் கடந்த 6 மாதத்தில் உயிரிழந்துள்ளனர்.
பின்னணியில் யார்
இவர்கள் அனைவரது மரணமும் சர்ச்சைக்குரிய வகையிலேயே இருந்துள்ளது. யாரும் இயற்கையான முறையில் உயிரிழந்ததாகத் தெரியவில்லை. இதன் காரணமாக அவர்களை யாராவது கொலை செய்து இருக்கலாம் என்ற யூகங்களும் எழுந்துள்ளன. குறிப்பாக, ரஷ்ய அரசே அவர்களைத் தீர்த்துக் கட்டியிருக்கும் என்றும் கூட இணையத்தில் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.