ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்), காங்கிரஸ், ஆர்ஜேடி கூட்டணி ஆட்சி நடக்கிறது. கடந்தாண்டு ஹேமந்த் சோரன், தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சுரங்க குத்தகைகளை ஒதுக்கீடு பெற்றதாக பாஜ குற்றம்சாட்டியது. இதனால், அவருடைய எம்எல்ஏ பதவியை பறிக்கும்படி ஜார்கண்ட் ஆளுநருக்கு தலைமை தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இந்த அரசியல் குழப்பத்தை பயன்படுத்தி தனது கூட்டணி கட்சி எம்எல்ஏ.க்களை பாஜ விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்க்க முயற்சிப்பதாக ஹேமந்த் சோரன் குற்றம்சாட்டினார்.
மேலும், எம்எல்ஏ.க்களை காங்கிரஸ் ஆளும் சட்டீஸ்கர் மாநிலத்துக்கு அழைத்து சென்று பாதுகாப்பாக தங்க வைத்தார். அதோடு, தனது அரசின் பலத்தை நிரூபிப்பதற்காக, சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவதாக அறிவித்தார். அதன்படி, இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கிறது. இதற்காக, இன்று காலை சிறப்பு சட்டப்பேரவை கூட்டப்படுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக, சட்டீஸ்கரில் இருந்த கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் அனைவரும் நேற்று மாலை ராஞ்சி வந்து சேர்ந்தனர். இதில், பாஜ.வின் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி வெற்றி பெறுமா? சோரன் வெற்றி பெறுவாரா? என்ற பரபரப்பு நிலவுகிறது.