திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர், மலேசியா மற்றும் வளைகுடா நாடுகளுக்கு அதிக அளவில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளிலிருந்து திருச்சிக்கு வரும் பயணிகளிடமிருந்து சோதனை செய்யும்போது, அடிக்கடி கடத்தல் தங்கம் சிக்கும் சம்பவங்கள் நடப்பதுண்டு. இந்த நிலையில், ‘செப்டம்பர் 2-ம் தேதி திருச்சிக்கு வரும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக’ அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. அதனடிப்படையில், சுங்கத்துறையினர் மற்றும் மத்திய வருவாய் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் அலர்ட் ஆகியுள்ளனர். அதையடுத்து மலேசியாவிலிருந்து வந்த மலிண்டோ ஏர் ஏசியா, சிங்கப்பூரிலிருந்து வந்த ஸ்கூட் ஏர்வேஸ், துபாயிலிருந்து வந்த ஏர் இந்தியா விமானங்களிலிருந்து இறங்கிய பயணிகளை கண்காணித்துள்ளனர்.
அதில் சந்தேகப்படும் வகையில் இருந்த 63 பேரை தனியே அழைத்து அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அப்போது அயன் பட பாணியில், இரண்டு பேர் தங்கத்தை பேஸ்ட் வடிவில் உருண்டைகளாக்கி வயிற்றில் மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்திருக்கிறது. மேலும், 55 பயணிகளிடம் 200-400 கிராம் வரை தங்க நகைகள் இருந்ததும் தெரியவந்தது. அந்த வகையில், சோதனையில் சுமார் 11 கிலோ தங்கம் சிக்கியிருக்கிறது. இதன் மதிப்பு சுமார் 5 கோடி இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. சோதனையில் சிக்கிய தங்கம் அனைத்தையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், தங்கம் எங்கிருந்து யாருக்காக கொண்டு வரப்பட்டது..? இதில் யார் யாருக்கெல்லாம் தொடர்பிருக்கிறது? விமான நிறுவனப் பணியாளர்களுக்கும், விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்களுக்கும் இதில் ஏதேனும் தொடர்பு உள்ளதா என மத்திய வருவாய் நுண்ணறிவுப் பிரிவினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.