வாட்டிய வறட்சி! சாமர்த்தியமாக டிராகன் பழங்களை பயிரிட்டு வருமானம் ஈட்டிய விவசாயிகள்!எப்படி?

தண்ணீர் பற்றாக்குறையால் வாழ்வாதாரத்தை இழந்த ஒரு விவசாயியும் அவரது மகனும், மருத்துவ குணம் வாய்ந்த டிராகன் பழங்களைப் பயிரிட்டு வறட்சி பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். இது குறித்து இந்த செய்தி தொகுப்பில் விரிவாகக் காணலாம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த உத்தனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீராமநாயுடு என்ற விவசாயி. தமிழகத்தில் பொதுவாக மானாவாரி சாகுபடி செய்வது வழக்கம். அதன்படி ராகி, கடலை, கம்பு, சோளம், திணை உள்ளிட்ட மானாவரி பயிர்களை ஸ்ரீராமநாயுடு சாகுபடி செய்துள்ளார். ஆனால் தண்ணீர் தட்டுபாட்டால் தொடர்ந்து இழப்பை சந்தித்து வந்துள்ளார்.
கைவிட்ட ஆழ்துளை கிணறுகள் – நிலைகுலைந்த குடும்பம்:
இந்நிலையில் அவருடைய மகன் கோபி டெலிகாம் துறையில் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது நாட்டையை உலுக்கி போட்ட கொரோனா அலையில் கோபி தனது வேலையை இழந்துள்ளார். மகனும் தந்தையுடன் சேர்ந்து மீண்டும் விவசாயம் செய்யலாம் என நினைத்து தன் நிலத்தில் பத்துக்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகளை அமைத்து விவசாயம் செய்ய முயன்றுள்ளார். ஆனால் அவ்வாறு அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகளிலும் போதிய நீர் வரத்து இல்லை. கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு இருந்ததால் விவசாயமும் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு குடும்பமே நிலைகுலைந்து போனது.
image
யூடியூப் உதவிடம் டிராகன்பழ விவசாயம்! காரணம் என்ன?
தொடர்ந்து இழப்பு மட்டும் வந்து கொண்டிருந்ததால் சுதாரித்துக் கொண்ட தந்தையும் மகனும் குறைந்த தண்ணீர் பயன்படுத்தி விவசாயம் செய்வது குறித்து யூடிபில் பார்த்துள்ளார். அப்போது குறைந்த தண்ணீர் செலவில் பயிரிடப்படும் பயிர்களான டிராகன் ஃப்ரூட்ஸ் மற்றும் பேரீச்சம்பழம் ஆகியவை குறித்த தகவல்கள் அடங்கிய வீடியோவை பார்த்துள்ளனர். பேரீச்சம்பழம் மகசூல் கொடுக்க 5 வருடங்கள் ஆகும் என்பதால் 6 மாதத்தில் மகசூல் கொடுக்கக் கூடிய டிராகன் பழங்களை பயிரிட முடிவு செய்தனர்.
image
சொட்டுநீர் பாசனத்தில் டிராகன் பழ விவசாயம்:
அதன்படி பல்வேறு இடங்களுக்கு சென்று அதனுடைய தொழில்நுட்பங்களை கண்டறிந்து தங்களுக்கு சொந்தமான நிலத்தில் சொட்டுநீர் பாசன வசதி மூலம் 1 ஏக்கர் நிலப்பரப்பில் 5 அடி இடைவெளி விட்டு சிமெண்ட் துண்டுகள் அமைத்து 4 லட்சம் ரூபாய் செலவிட்டு டிராகன் பழ செடிகளை பயிரிட்டுள்ளனர். பயிரிட்டு ஆறு மாதங்களில் டிராகன் பழங்கள் அறுவடைக்கு தயாராகும் என்று தெரிவிக்கும் இவர்கள் 20 ஆண்டுகள் வரை தொடர்ந்து அறுவடை செய்ய முடியும் என்று தெரிவித்தனர்.
image
அமோக விளைச்சல்! அபார விலை:
தற்போது இவர்கள் நிலத்தில் விளையும் ஒரு டிராகன் பழம் 400 முதல் 450 கிராம் அளவு எடை கொண்டதாக உள்ளது. ஒரு பழம் 70 முதல் 75 ரூபாய் வரை விலை கிடைக்கிறது என்றும், கர்நாடகம், கேரளா போன்ற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்வதால் இதற்கான தேவை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். முன்னர் ஒரு ஏக்கர் சாகுபடி செய்து இருந்த இவர்கள் தற்போது மேலும் 3 ஏக்கர் நிலப்பரப்பில் டிராகன் பழம் பயிரிட்டிருப்பதாக கூறுகின்றனர்.
image
“மருத்துவ குணம் கொண்ட டிராகன் பழம்”
இந்த வகை பழம் சாப்பிடுவதால் சர்க்கரை அளவு பராமரித்தல், நோய் எதிர்ப்பு சக்தி, புற்றுநோய் தடுப்பு போன்ற பலனை கொடுப்பதால் அனைவரும் சாப்பிட மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. ஒரு ஏக்கர் பரப்பளவில் பயிரிட செலவிட்ட பணத்தை 2 ஆண்டுகளில் திரும்ப பெற முடியும் என்பதால் மற்ற விவசாயிகளுக்கு டிராகன் பழங்களை பயிரிட இந்த விவசாயிகள் பரிந்துரைக்கின்றனர்.
image
குறைவான தண்ணீர் போதும்! அதுவும் ஆறு மாதங்களுக்கு மட்டுமே:
“டிராகன் பழ விளைச்சலிக்கு தண்ணீர் குறைவாக தேவைப்படும். வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது. தினசரி பாய்ச்ச வேண்டிய அவசியமில்லை. அதிலும் ஜூன் முதல் நவம்பர் வரை இயல்பாகவே மழை பெய்யும் காலம் என்பதால் தண்ணீர் பாய்ச்ச வேண்டியதில்லை” என்று கூறினார் விவசாயி கோபி.
image
தமிழகத்திலும் களைகட்டும் டிராகன் பழ விவசாயம்:
டிராகன் (கமலம்) பழம் கள்ளி வகை பழப்பயிர். இது லத்தீன் அமெரிக்காவில் தோன்றி தற்போது வியட்நாம், சீனா, மலேசியா, இந்தோனேசியா, இலங்கையில் அதிக அளவில் பயிர் செய்யப்படுகிறது. உலகிலேயே வியட்நாம் டிராகன் பழ உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது.

இந்தியாவில் மகாராஷ்டிரா, குஜராத், மேற்கு வங்கம், ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் சாகுபடி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் விருதுநகர், ஈரோடு, மதுரை, தருமபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் சிறிய அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்த விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.
– ம.ஜெகன்நாத், ச.முத்துகிருஷ்ணன்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.