விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், ஜிஎஸ்டி உயர்வு: ஒன்றிய அரசுக்கு எதிராக காங். கண்டன பேரணி; ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

புதுடெல்லி: விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், ஜிஎஸ்டி உயர்வை கண்டித்து ஒன்றிய அரசுக்கு எதிராக டெல்லியில் காங்கிரஸ் சார்பில் கண்டன பேரணி நடந்தது.  ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கடந்த சில நாட்களுக்கு  முன் சொந்த காரணங்களுக்காக வெளிநாடு சென்றிருந்தார். அவருடன் அவரது மகனும்  காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மகளான பொதுச் செயலாளர் பிரியங்கா  காந்தியும் சென்றனர்.

இந்நிலையில் ராகுல் காந்தி தற்போது டெல்லி திரும்பி  உள்ளார். வரும் 7ம் தேதி ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராகவும், வகுப்புவாத  நல்லிணக்கத்திற்காகவும் காங்கிரஸ் கட்சி சார்பில் இந்திய ஒற்றுமை  நடைப்பயணத்தை (பாரத் ஜோடோ யாத்ரா ) கன்னியாகுமரியில் இருந்து ராகுல் காந்தி  தலைமையில் தொடங்குகிறது. சுமார் 3,500 கி.மீ. தூரம் காஷ்மீர் வரை செல்லும்  இந்த நடைபயணத்தின் போது, மக்களை காங்கிரஸ் சந்திக்கிறது.

இந்நிலையில் விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், அத்தியாவசியப் பொருள்கள் மீதான ஜிஎஸ்டி உயர்வு போன்றவைகளுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று டெல்லி ராம்லீலா மைதானத்தில் மிகப் பெரிய பேரணி நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. முன்னதாக டெல்லி ராம்லீலா மைதானம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில்  விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்திருந்தனர். இது தொடர்பாக  டெல்லி காவல்துறை போக்குவரத்து அறிவுரையை வெளியிட்டுள்ளது. ரஞ்சித் சிங் ப்ளைஓவர் பாரகாம்பா சாலையில் இருந்து குருநானக் சவுக், விவேகானந்தா மார்க், டெல்லி கேட் முதல் குருநானக் சவுக், கமலா சந்தை, சமன் லால் மார்க், அஜ்மேரி கேட், கமலா மார்க்கெட் ஆசப் அலி சாலை, மின்டோ ரோடு ரெட் லைட் பாயின்ட் ஆகிய முக்கிய சாலைகள்  அடைக்கப்பட்டது. மாற்றுவழியில் வாகன ஓட்டிகள் செல்லுமாறு  அறிவுறுத்தப்பட்டது.

போராட்டம் நடக்கும் பகுதிகளில் உள்ளூர் போலீசாருடன்.  துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டிருந்தனர். அதன்படி, இன்றையை பேரணியில் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக கூறப்பட்டதால், டெல்லி, அரியானா, உத்தர பிரதேசம் மற்றும் நாட்டின் பிற பகுதிகளைச் சேர்ந்த தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் டெல்லியில் குவிந்தனர். காலை 11 மணியளவில் தொடங்கிய கண்டன பேரணியின் போது, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், ஜிஎஸ்டி போன்ற பிரச்னைகள் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், கே.சி.வேணுகோபால், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

இன்றைய பேரணியில் பங்கேற்கும் முன் ராகுல்காந்தி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு முன்பும் மக்கள் 10 முறை சிந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இன்றைய நிலைக்கு பிரதமர் மோடி மட்டுமே காரணம்’ என்று கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.