சென்னை : விஜய் டிவியின் நீயா நானா ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மதியம் ஒளிபரப்பாகி வருகிறது.
வாரந்தோறும் சிறப்பான பல டாப்பிக்குகளில் இந்த நிகழ்ச்சி சம்பந்தப்பட்ட இரு தரப்பினரையும் வைத்துக் கொண்டு சிறப்பாக கொண்டு செல்லப்பட்டு வருகிறது.
10 ஆண்டுகளை கடந்து விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியாக நீயா நானா நிகழ்ச்சியை தொகுப்பாளர் கோபிநாத் சிறப்பாக கொண்டு சென்று வருகிறார்.
நீயா நானா நிகழ்ச்சி
விஜய் டிவியின் முன்னணி மற்றும் முக்கியமான நிகழ்ச்சியாக நீயா நானா விளங்குகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வதேச அளவில் மட்டுமில்லாமல் நமது பக்கத்து தெருவில் நடக்கும் பல நிகழ்வுகளை மையமாக கொண்டு இந்த நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இருதரப்பு வாதங்கள்
சம்பந்தப்பட்ட நிகழ்வின் இரண்டு தரப்பினரையும் அவரவர் வாதங்களையும் இந்தத் தொடர் முன் வைத்து வருகிறது. தொடர்ந்து வெற்றிகரமாக 10 ஆண்டுகளை கடந்து ஒரு ஷோவை முன்னிலையில் வைத்திருக்க முடியுமா என்ற கேள்விக்கு இந்த நிகழ்ச்சியும் அதன் தொகுப்பாளர் கோபிநாத்தும் விடையாக உள்ளனர்.
அனல்பறக்கும் விவாதங்கள்
ஒவ்வொரு வாரமும் அனல் பறக்கும் டாப்பிக்குகளை கொண்டு விவாதங்களை நடத்தி வருகிறார் கோபிநாத். பெரும்பாலும் அந்தந்த தரப்பினரை அதிகமாக பேசவிட்டு அவர்களை பேச்சிற்கு இடையில் அவர்களை பேச்சை சரியாக வழிநடத்துவது கோபிநாத்தின் ஸ்டைல். சம்பந்தப்பட்ட இருதரப்பினரையும் சரியான தளத்தில் இயங்கவிடுவார்.
வீட்டு வேலை செய்யும் பெண்கள்
அந்த வகையில் இந்த வாரம் வீட்டு வேலை செய்யும் பெண்கள் அந்த வீடுகளில் சந்திக்கும் பிரச்சினைகள், சமூகத்தில் நிலவும் சாதிய ஏற்றத்தாழ்வுகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. நாய்களுக்கு தனியாக வைப்பது போல தட்டு, டம்பளரை வீட்டின் உரிமையாளர்கள் வைப்பதாக வேலை செய்பவர்கள் வருத்தம் தெரிவித்தனர்.
கேவலமான நடைமுறைகள்
கடைக்கு செல்வதற்கு தங்களின் கைகளை தொடாமல் பணம் தரும் உரிமையாளர்கள், அவர்கள் வீட்டின் நாயை கட்டித்தழுவி முத்தம் இடுவதாகவும் தாங்கள் நாயை விட கேவலமாக மாறியுள்ளதாகவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டனர். தாங்கள் குடிக்கும் காபி டம்ளரை வீட்டிற்குள் கழுவ முடியாத நிலையும் காணப்படுவதாகவும் அவர்கள் கூறினர்.
கோபிநாத் கேள்வி
சமையல் வேலை செய்தாலும் அவர்கள் சாப்பிடும்போது இணைந்து சாப்பிட முடியாது என்றும் தங்களது மனவருத்தங்களை பதிவு செய்தனர். இதையடுத்து வேலை செய்யும் இடத்தில் உரிமைகளை பேசும் நாம் ஏன் இன்னமும் இதுபோன்ற வழிமுறைகளை பின்பற்றுகிறோம், இது என்ன மாதிரியான மனநிலை என்று கோபிநாத் கேள்வி எழுப்புகிறார்.
நீயா நானா ப்ரமோ
இன்றைய நீயா நானா நிகழ்ச்சியின் இந்தப் ப்ரமோ விஜய் டிவி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது வெளியாகியுள்ளது. காலங்காலமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இத்தகைய நடைமுறைகளை இந்த நிகழ்ச்சி தற்போது கேள்விக்குட்படுத்தியுள்ளது. இதற்கான தீர்வு சமூகத்தில் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.