கொல்கத்தா: ஹவுரா மாநகராட்சி தேர்தல் குறித்து மேற்குவங்க தற்காலிக ஆளுநர் இல.கணேசனிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் எவ்வித பதிலும் அளிக்காமல் கிளம்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேற்குவங்க ஆளுநராக இருந்த ஜக்தீப் தன்கர் துணை குடியரசு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அதனால் மேற்குவங்க மாநில தற்காலிக ஆளுநராக மணிப்பூர் ஆளுநர் இல.கணேசன் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் அவர் ஹவுராவில் நடந்த கலாசார நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அதன்பிறகு, ஹவுரா மாநகராட்சித் தேர்தல் குறித்து செய்தியாளர்கள் ஆளுநர் இல.கணேசனிடம் கேள்வி எழுப்பினர். ஆனால், அந்த கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் தந்திரமாக தவிர்த்துவிட்டு கிளம்பினார். அதனால் ஹவுரா மாநகராட்சி தேர்தல் எப்போது நடைபெறும் என்பதை உறுதிப்படுத்த முடியாத நிலையே தொடர்கிறது. முன்னதாக கடந்த 2018ம் ஆண்டு டிசம்பரில் ஹவுரா மாநகராட்சியில் இருந்து பாலி பகுதியை பிரிப்பது ெதாடர்பான மாநில அரசின் கோப்புகள் ஆளுநர் மாளிகையில் பல மாதங்களாக கிடப்பில் உள்ளது.
அப்போதைய ஆளுநர் ஜக்தீப் தங்கர் பதவியில் இருக்கும் போது, இந்த கோப்புகள் அனுப்பப்பட்டன. ஆனால், அந்த கோப்புகளின் மீது ஆளுநர் ஒப்புதல் தராததால் ஹவுரா மாநகராட்சி தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. தற்காலிக ஆளுநர் இல.கணேசன் ஹவுரா பிரச்னைக்கு தீர்வு காண்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரும் நடவடிக்கை எடுக்காததால் ஆளுங்கட்சி தரப்பில் கடும் அதிருப்தி நிலவி வருகிறது.