முன்பு மேடையில் பரஸ்பரம் அரசியல் கட்சி தலைவர்கள் மாறி மாறி பேசி வருவார்கள். ஆனால், சமூக வலைதளங்கள் பெருகியபிறகு, குறிப்பாக ட்விட்டர் பக்கத்தில் அரசியல் தலைவர்கள் கருத்து சண்டை நடத்தி வருகிறார்கள். அந்த வகையில், ட்விட்டர் பக்கத்தில் ஆக்டிவாக இருந்துவரும் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்விட்டர் கணக்கு, ஹேக் செய்யப்பட்டது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்விட்டர் கணக்கில் நள்ளிரவில் ஒரு பதிவு வெளியானது.
அந்த பதிவில், `அனைவருக்கும் வணக்கம், எங்கள் கட்சி அதன் சொந்த கிரிப்டோ வாலட்டை உருவாக்கியுள்ளது. இன்று, முன்னெப்போதையும்விட, ஆற்றல் வளர்ச்சியில் உங்கள் உதவி எங்களுக்குத் தேவை’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. தொடர்ந்து, பதியப்பட்ட இரண்டாவது ட்வீட்டில், ‘கோவிட் 19-உடன் போராடும் மக்களுக்கு உதவ $1 மில்லியன் திரட்ட விரும்புகிறோம். எனவே, நாங்கள் கிரிப்டோ பணப்பைகளை உருவாக்கினோம். அனைத்து பணமும் ஹெல்பிண்டியா நிறுவனத்திற்கு அனுப்பப்படும். உதவிக்கான கிரிப்டோ முகவரிகள்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அதோடு, Variorius (@V_Senthilbalaji) என கணக்கின் பெயரும் மாற்றப்பட்டது. அதனால், அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு அதிர்ச்சியில் ஆழ்ந்தது.
இது குறித்து செந்தில் பாலாஜி தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “அன்புமிகு நண்பர்களுக்கு, நேற்றிரவு எனது ட்விட்டர் கணக்கு (@V_Senthilbalaji) ஹேக் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சைபர் க்ரைம்-ல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. Thanks for your concern and support” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், இன்று மதியம் செந்தில் பாலாஜியின் ட்விட்டர் கணக்கு மீட்கப்பட்டது. இது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில், “என்னுடைய ட்விட்டர் கணக்கு மீட்கப்பட்டு விட்டது. உங்களுடைய அக்கறைக்கும், ஆதரவுக்கும் நன்றி. சைபர் க்ரைம் பிரிவுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” எனப் பதிவிட்டிருக்கிறார்.