4 கோடி ரூபாய் நகையை கொள்ளையடித்த கும்பலை வெறும் 100 ரூபாய் டிரான்ஸாக்ஷனை வைத்து கூண்டோடு மடக்கிப் பிடித்திருக்கும் சுவாரஸ்யத்தை அரங்கேற்றியிருக்கிறது டெல்லி போலீஸ்.
கடந்த புதன் கிழமையன்று (ஆக.,31) டெல்லியில் உள்ள பஹர்கஞ்ச் பகுதியில் நடந்த கொள்ளை சம்பவத்தைதான் டெல்லி போலீஸ் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதன்படி, பஹர்கஞ்ச் பகுதியில் உள்ள கூரியர் நிறுவனம் ஒன்று நகைகள் மற்றும் கலைநயம் மிக்க பொருட்களை டெலிவரி செய்யும் வேலைகளை பார்த்து வருகிறது.
கடந்த புதன்கிழமையன்று அதிகாலை 4 மணிக்கு மேல் லூதியானா மற்றும் சண்டிகர் ஆகிய பகுதிகளுக்கு சுமார் 4 கோடி மதிப்பிலான தங்க நகைகளை டெலிவரி செய்வதற்காக கூரியர் நிறுவன ஊழியர்கள் பேக்கிங் வேலைகளில் ஈடுபட்டிருந்திருக்கிறார்கள்.
அப்போது, அவ்வழியே வந்த போலீஸ் வேடமணிந்த 3 பேர் கொண்ட கும்பல் ஒன்று வாகனத்தில் நகைகள் கொண்ட சரக்குகளை ஏற்றும் போது கூரியர் ஊழியர்களை வழிமறித்து ஆய்வு செய்வது போல நடித்ததோடு கண்ணிமைக்கும் நேரத்தில் கூரியர் ஊழியர்கள் மீது மிளகாய் பொடியை தூவி நகைகளை கொள்ளையடித்துச் சென்றிருக்கிறார்கள்.
இதனையடுத்து டெல்லி போலீசாரை தொடர்புகொண்டு சுமார் 4.50 மணியளவில் கூரியர் நிறுவனத்திடம் இருந்து புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. உடனடியான சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்திருக்கிறார்கள். அதன்படி, கொள்ளையில் ஈடுபட்ட நால்வரும் சுமார் 15 நாட்களாகவே போலீஸ் வேடத்தில் கூரியர் ஆஃபிசை நோட்டமிட்டு வந்தது தெரிய வந்திருக்கிறது.
அந்த கும்பலை சேர்ந்த ஒரு திருடன் நோட்டமிடும் போது அப்பகுதியில் இருக்கும் டீக்கடை ஒன்றில் டீ வாங்கி குடித்திருக்கிறான். ஆனால் டீ வாங்கி குடித்ததற்கு கொடுக்க பணம் இல்லாததால் அவ்வழியே வந்த டாக்சியை நிறுத்தி அந்த நபருக்கு Paytm மூலம் 100 ரூபாயை அனுப்பி டாக்சி டிரைவரிடம் இருந்து 100 ரூபாயை வாங்கி டீக்கடையில் கொடுத்திருக்கிறான்.
இந்த ஒரு க்ளூவை வைத்து அந்த டாக்சி டிரைவரை தொடர்பு கொண்டு அவரது பேடிஎம் பரிவர்த்தனையை வைத்து அந்த நிறுவனத்திடம் பேசி குறிப்பிட்ட அந்த திருடனின் செல்போன் சிக்னலை வைத்து அந்த கும்பல் இருக்கும் இடத்தை டெல்லி போலீஸ் கண்டுபிடித்திருக்கிறது. அதன்படி உடனடியாக அந்த இடத்துக்கு விரைந்த போது அந்த கொள்ளை கும்பல் அங்கிருந்து தப்பியதால் சிக்கிய திருடனின் செல்போன் சிக்னலுடன் தொடர்பில் இருந்த மற்ற திருடர்களின் செல்போன் எண்ணை வைத்து கொள்ளை கும்பலை டெல்லி போலீஸ் அடையாளம்
கண்டிருக்கிறது.
அதனையடுத்து அவர்களை டிராக் செய்ததில் ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் பதுங்கி இருந்தது தெரிய வந்திருக்கிறது. இதனையடுத்து அந்த கொள்ளை கும்பலை கூண்டோடு கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்த நகைகளையும் கைப்பற்றியிருக்கிறார்கள்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM