‘‘எட்டுவழிச் சாலை திட்டத்தில் ஆளும் கட்சியாக இருப்பதால் திமுகவுக்கு நெருடல் ஏற்படத்தான் செய்யும்,’’ என கார்த்தி சிதம்பரம் எம்பி தெரிவித்தார்.
தேவகோட்டை அருகே அனுமந்தக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. மாங்குடி எம்எல்ஏ முன்னிலை வகித்தார். கார்த்தி சிதம்பரம் எம்பி முகாமை தொடங்கி வைத்து பேசியதாவது:
தேசிய அரசியலில் காங்கிரஸ் ஆளும்கட்சியாகவோ அல்லது எதிர்க்கட்சியாகவோ இருக்கும். ஆனால், தமிழகத்தில் ஆளும்கட்சி கூட்டணியில் இருந்தாலும், முழுமையான எதிர்க்கட்சியாக இல்லை. அதனால் அதற்கு ஏற்ப நாங்கள் செயல்படுகிறோம்.
அதிமுகதான் தற்போதும் எதிர்க்கட்சி. அக்கட்சியை குறைத்து மதிப்பிட முடியாது. கிராமங்கள்தோறும் கிளைகள் பரப்பி இருக்கும் பெரிய கட்சி. அவர்களுக்குள் உள்ள போட்டியால் மக்கள் பிரச்சினை குறித்து பேசாமல் இருக்கலாம். பாஜகவுக்கு இந்திய அளவில் 35 சதவீத வாக்குகள்தான் உள்ளன. எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பு காங்கிரஸுக்கு உள்ளது.
குலாம்நபி ஆசாத் கட்சியில் இருந்து சென்றது பாதிப்புதான். கட்சியில் இருந்து யார் சென்றாலும் பாதிப்பு தான். அவர்கள் வெளியே போகாமல் பார்த்து கொள்வது நிர்வாகிகளின் பொறுப்பு. ஊடகங்களுக்கு விளம்பரங்கள் கொடுப்பதால், பாஜகவை பெரிதாக காட்டுகின்றனர்.
காங்கிரஸ் கடைத் தொண்டன் ராகுல்காந்தி தலைவராக வேண்டும் என்று நினைக்கிறான். அவரோ, அவரது குடும்பத்திலோ யார் தலைவராக வந்தாலும் தொண்டர்கள் ஏற்பர். பெரும்பாலான கட்சிகளில் ஒரு குடும் பத்தைச் சுற்றித்தான் அரசியலே நடக்கிறது. தமிழகத்தில் திமுகவில் கருணாநிதி குடும்பம், பாமகவில் ராமதாஸ் குடும்பம் போன்றவற்றை எடுத்து கொள்ளலாம்.
புதுடெல்லி முதல்வரும், தமிழக முதல்வரும் இணைக்கமாக இருப்பது ராஜாங்க உறவுதான். இதை வரவேற்கிறேன். இதை அரசியலாக்க வேண்டாம். எப்போதும், எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடும், ஆளும்கட்சியாக மாறியதும் ஒரு நிலைப்பாடும் எடுப்பது போன்று நெருடல் ஏற்படத்தான் செய்யும். திமுகவும் அந்த நிலையில் தான் உள்ளது.
மக்கள் ஒப்புதலோடு எட்டுவழிச் சாலை, விமான நிலையத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.