இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனில், கடந்த சில வாரங்களுக்கு முன்பாக, 3 லட்சம் டாலர் மதிப்பிலான `பென்ட்லி’ (Bentley) எனப்படும் உயர்ரக சொகுசு கார் ஒன்று களவுபோயிருந்தது. அதைத் தொடர்ந்து இங்கிலாந்து அதிகாரிகளும் பலநாள்களாகக் காரை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் லண்டனில் களவுபோன சொகுசு கார், பாகிஸ்தான் தலைநகர் கராச்சியில் ஒரு பங்களாவில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்திருக்கின்றன.
இது குறித்து கராச்சியிலுள்ள சுங்க அமலாக்கத்தின் ஆட்சியர் அலுவலகம், களவுபோன பென்ட்லி கார் கார்ச்சியின் ஆடம்பர குடியிருப்பு பகுதியில் நிறுத்தப்பட்டிருப்பதாக, இங்கிலாந்தின் தேசிய குற்றவியல் நிறுவனத்திடமிருந்து தகவல் வர உடனடியாக அங்கு ரெய்டு மேற்கொண்டது. சோதனையில், பாகிஸ்தான் நாட்டு பதிவு மற்றும் நம்பர் பிளேட் கொண்ட பென்ட்லி காரை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்தனர். மேலும், பென்ட்லி காரிலுள்ள ட்ரேசிங் டிராக்கரை(tracing tracker) அகற்றவோ அல்லது அணைக்கவோ தவறியதாலே, இங்கிலாந்து அதிகாரிகள் கண்டுபிடித்தனர் எனச் சொல்லப்படுகிறது.
பாகிஸ்தானில் பதிவுசெய்யப்பட்ட நம்பராக இருப்பினும், இங்கிலாந்து அதிகாரிகள் வழங்கிய காரின் சேஸ் நம்பர் அதனுடன் ஒத்துப்போவதைப் பாகிஸ்தான் சுங்க அதிகாரிகள் அறிந்தனர். மேலும், இது தொடர்பாக குடியிருப்பின் உரிமையாளரும் போதிய ஆவணங்களை சமர்ப்பிக்கத் தவறியதால் காரை பறிமுதல் செய்த பாகிஸ்தான் அதிகாரிகள், காரின் பதிவு போலி எனத் தெரிவித்தனர். இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள், கிழக்கு ஐரோப்பிய நாட்டின் உயர்மட்ட தூதர் ஒருவரின் ஆவணங்களைப் பயன்படுத்தி காரை பாகிஸ்தானுக்கு இறக்குமதி செய்ததாகவும் கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், சுங்க அதிகாரிகள் தாக்கல் செய்த எஃப்.ஐ.ஆர்-படி, காரை திருடி கடத்தியதால் 300 மில்லியனுக்கும் அதிகமான பாகிஸ்தான் ரூபாய் வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. காரை கடத்தியது யார் என்று தெரியாத நிலையில், இந்த முழு மோசடிக்கு மூளையாகச் செயல்பட்ட நபரைத் தீவிரமாகத் தேடிவருவதாக அதிகாரியொருவர் தெரிவித்திருக்கிறார்.