புதுடெல்லி: அடுத்த 18 ஆண்டுகளில் உலகம்முழுவதும் உள்ள தரிசு நிலங்களை, 50 சதவீதம் குறைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள ஜி-20 நாடுகள் சம்மதம் தெரிவித்துள்ளன.
தரிசு நிலத்தை மீட்பதற்கான ஐ.நா அமைப்பு (யுஎன்சிசிடி) சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், உலகளவில் உள்ள நிலப்பகுதியில் 40 சதவீதம் தரிசு நிலமாக கிடக்கிறது என தெரிவித்துள்ளது. இதன் காரணமாக 50 சதவீத மக்கள் பாதிப்படைகின்றனர். மேலும், இது உலகளாவிய மொத்த உற்பத்தி மதிப்பில்(4.4 லட்சம் கோடி அமெரிக்க டாலர்) சுமார் பாதியளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
2050-ம் ஆண்டு வரை வர்த்தக தொழில்கள் தொடர்ந்து நடந்தால், தென் அமெரிக்கா கண்டம் அளவுக்கு தரிசு நிலத்தின் அளவு கூடுதலாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. உலகளவில் உள்ள மொத்த நிலப் பகுதியில் 40 சதவீதத்துக்கு மேல் விவசாய நிலங்கள் உள்ளன. மொத்த விவசாய நிலத்தில், 52 சதவீதம் தரிசு நிலமாக உள்ளன.
காடுகள் அழிப்பு
80 சதவீத காடுகள் அழிந்ததற்கு விவசாயம் காரணமாக உள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை விவசாயத்துக்காக சட்ட விதிமுறைகளை மீறி 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட வெப்பமண்டல காடுகள் அழிக்கப்பட் டுள்ளன. நிலப்பயன்பாடு மாற்றம் மற்றும் தரிசு நிலம் காரணமாக கார்பன் வெளியேற்றம் அளவும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
இந்த சுற்றுச்சூழல் பிரச்சினை குறித்து இந்தோனேஷியாவின் பாலித் தீவில் இந்த வாரம் நடந்த ஜி-20 நாடுகளின் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதில் இந்தியா சார்பில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் புபேந்தர் யாதவ் கலந்து கொண்டார்.
100 கோடி ஹெக்டேர்
உலகம் முழுவதும் உள்ள தரிசு நிலங்களில் 100 கோடி ஹெக்டேர் தரிசு நிலங்களை 2030-ம் ஆண்டுக்குள் சரி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2040-ம் ஆண்டுக்குள் தரிசு நில அளவை 50 சதவீதம் குறைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள கூட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள மொத்த நிலப் பகுதி 32.87 கோடி ஹெக்டேர். இதில் தரிசு நிலம் 9.64 கோடி ஹெக்டேர். 2030-ம் ஆண்டுக்குள் 2.6 கோடி ஹெக்டேர் தரிசு நிலங்களை மீட்க இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்த கூட்டத்தில் உரையாற்றிய மத்தியசுற்றுச் சூழல் அமைச்சர் புபேந்தர் யாதவ் கூறியதாவது:
ஐ.நா பருவநிலை மாற்ற விதிமுறைகள் மற்றும் ரியோ டி ஜெனிரோ மாநாட்டு தீர்மானங்களின் படி,ஐ.நாவின் 2021-2030-ம் ஆண்டுகால சுற்றுச்சூழல் மீட்பு நடவடிக்கைகளை அமல்படுத்தவும், நமதுஉலகளாவிய பருவநிலை இலக்குகளில் முன்னேற்றம் ஏற்படவும் நமது கூட்டு முயற்சிகள் உதவ வேண்டும்.
உலக நிலப் பகுதியில் 23 சதவீதம் அளவுக்கு விவசாயத்துக்கு பயன்படாமல் உள்ளது. 75 சதவீத நிலம் அதன் இயல்பான நிலையில் இருந்து மாற்றம் அடைந்துள்ளது. தரிசு நிலத்தை மீண்டும் சரி செய்ய ஜி-20 நாடுகளின் தொடர் ஆதரவு தேவை. இந்தியாவில் உள்ள தரிசு நிலங்களை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இவ்வாறு அமைச்சர் புபேந்தர் யாதவ் கூறினார்.