சென்னை: சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தைப் பார்வையிட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், “அண்ணா நூற்றாண்டு நூலகம் தமிழகத்தின் பெருமை மட்டுமல்ல, இந்தியாவின் பெருமை” என்று கூறியுள்ளார்.
சென்னை வந்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தினை தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் சென்று பார்வையிட்டார். அதன்பின்னர், அரசு மாதிரிப் பள்ளி மாணவர்களுடன் அரவிந்த் கேஜ்ரிவால் கலந்துரையாடினார்.
பின்னர், அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் முதல் தளத்தில் குழந்தைகளுக்கான பிரிவு, அங்கு வைக்கப்பட்டுள்ள புத்தகங்களை அரவிந்த் கேஜ்ரிவால் பார்வையிட்டார். மேலும், 6-ம் தளத்தில் உள்ள பொறியியல் மற்றும் வேளாண்மைப் பாடப்பிரிவு, 7-ம் தளத்தில் உள்ள ஓலைச்சுவடி பிரிவையும் பார்வையிட்டார்.
தமிழக பள்ளிக் கல்வித் துறையின் பாடத்திட்டங்கள், தொழில்நுட்பங்கள் மாணவர்களிடம் எப்படி சென்று சேர்ந்துள்ளது. மாணவர்கள் அதனை உள்வாங்கியுள்ளனர். பள்ளிக் கல்வித் துறை மூலம் தமிழக அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்கள் குறித்தும் நூலகத்தைப் பார்வையிட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு எடுத்துக் கூறப்பட்டது.
நூலகத்தை பார்வையிட்ட பின்னர் விருந்தினர் புத்தகத்தில் கையெழுத்திட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், “அண்ணா நூற்றாண்டு நூலகத்தை பார்வையிட்டதில் மகிழ்ச்சி. இந்நூலகத்தில் எண்ணற்ற நூல்களும், கல்வெட்டுக்களும் சிறப்பான முறையில் பாதுகாக்கப்பட்டுள்ளன. இந்த நூலகம் வெறும் தமிழ்நாட்டின் பெருமை மட்டுமல்ல, இந்தியாவின் பெருமை” என்று குறிப்பிட்டுள்ளார்.