அசைவ உணவுகளை தவிர்த்து, விலங்குகளிடமிருந்து பெறப்படும் முட்டை, எண்ணெய் போன்ற உணவுகளையும் தவிர்த்து, மேலும் பால் மற்றும் `டயரி’ பொருள்கள் என்று அழைக்கப்படும் பனீர், தயிர், சீஸ், நெய் போன்ற பால் சம்பந்தப்பட்ட பொருள்களையும் தவிர்க்கும் சைவ உணவுமுறையே ‘வீகன்’ உணவுமுறை. `வீகனிசம்’ என்ற உணவு முறையைக் கடைப்பிடிப்பவர்கள் `வீகன்ஸ்’ என்று அழைக்கப்படுகிறார்கள்.
இதை அதி தீவிர சைவம் என்றும் அழைக்கலாம். இதை பின்பற்றுபவர்களை தமிழில், `நனி சைவத்தினர்’ என்று குறிப்பிடுகிறார்கள். வீகன் உணவு முறையை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கையானது, கடந்த சில ஆண்டுகளாக உலகம் முழுவதும் அதிகரித்துள்ளது.
இவர்கள் சந்தையில் உள்ள பெரும்பாலான உணவு உற்பத்தி பொருள்களை புறக்கணிக்கின்றனர். அதற்கு முக்கியக் காரணங்கள் உடல் நலன், விலங்குகளின் நலன் ஆகியவை எனக் குறிப்பிடுகின்றனர். வணிக நோக்கால் இயற்கைக்கு மாறான முறையில் தயாரிக்கப்படும் உணவுப் பொருள்களை தவிர்க்க வேண்டும் என்பதே இவர்கள் நோக்கம். பெரும் வர்த்தக நோக்கத்துடன் செயல்பட்டுவரும் பால் பொருள்கள் உற்பத்தி செய்யும் கூடங்களில் லாப நோக்கத்துக்காகக் கால்நடைகள் துன்புறுத்தப்படுகின்றன எனக் கருதும் இவர்கள் அந்த உணவுப்பொருள்களை தவிர்க்கின்றனர்.
இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த தம்பதி ஷீலா ஓ லியரி, ரைய் ’வீகன்’ உணவு முறையை அதி தீவிரமாக பின்பற்றிவந்தனர். ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கோரலில் வசித்த இந்த தம்பதிக்கு நான்கு குழந்தைகள் இருந்தனர்.
இந்த தம்பதி கடந்த சில ஆண்டுகளாகவே வீகன் உணவுப் பழக்கத்தை தீவிரமாகக் கடைப்பிடித்து வந்தனர். அத்துடன் தங்கள் நான்கு குழந்தைகளுக்கும் வீகன் உணவுமுறைப்படி உணவுகளைக் கொடுத்து வந்தனர். குழந்தைகள் மெலிந்த நிலைக்கு வந்தனர். கடைசியாக பிறந்து, 18 மாதங்களான ஆண் குழந்தை எஸ்ரா-வுக்கும் தாய்ப்பாலை ஊட்டியதோடு மாம்பழம், ஆப்பிள் போன்ற பழங்கள், பச்சை காய்கறிகளை மட்டுமே கூடுதல் உணவாகப் பெற்றோர் அளித்துள்ளனர்.
ஊட்டச்சத்து குறைப்பாட்டால் மெலிந்த அந்தக் குழந்தை 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மூச்சுத் திணறி இறந்தது.
குழந்தையின் மரணத்தை தொடர்ந்து மருத்துவர்களும், போலீசார் விசாரணையிலும் வெளிவந்த தகவல்கள் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
குழந்தையின் மரணத்தை விசாரணை செய்த போலீசார், “பெற்றோர் தங்கள் குழந்தைகளை கடுமையான வீகன் உணவு முறைக்கு பழக்கப்படுத்தியுள்ளனர். 18 மாதங்கள் நிறைவடைந்த அந்தக் குழந்தை இறந்தபோது, ஏழு மாத குழந்தையின் அளவில் இருந்தது.
இறந்த குழந்தை உட்பட மற்ற மூன்று குழந்தைகளும் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டு, ஆரோக்கியமற்ற நிலையில் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்” என்று கூறியுள்ளனர். அத்துடன் தம்பதி இருவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், தற்போது தீர்ப்பு வெளிவந்தது. குழந்தையின் தாய் ஷீலாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
3’8 வயதான ஷீலா ஓ லியரி, மகனுக்குப் பழங்கள் மற்றும் காய்கறிகளை மட்டுமே உணவாக அளித்ததில் பட்டினியால் அந்தக் குழந்தை இறந்துள்ளது. கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது’ என நீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது.