அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் உயர்கல்வியில் அதிக அளவில் சேருவதை ஊக்குவிக்கும் வகையில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமணம் உதவித் திட்டமானது முதல்வர்
தலைமையிலான திமுக அரசால் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு தான் “புதுமைப் பெண்” என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்த மாணவிகள், உயர்கல்வியில் சேர்ந்து மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உறுதித்தொகை பெறுவர். 12ஆம் வகுப்பை முடித்து விட்டு அரசு கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகளில் சேர்ந்து தங்களது உயர் கல்வியை மாணவிகள் தொடரலாம். இவர்கள் அனைவருக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உறுதித்தொகை வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க penkalvi.tn.gov.in என்ற இணையதளத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது. இந்நிலையில் சென்னை பாரதி மகளிர் கல்லூரியில் இன்று காலை நடந்த அரசு நிகழ்ச்சியில், புதுமைப் பெண் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது மாணவிகளுக்கு ”புதுமைப் பெண்” என்று அச்சிடப்பட்ட டெபிட் கார்டுகளை வழங்கினார். இந்த திட்டத்தில் பயனடையும் மாணவிகளுக்கு அவர்களின் மொபைலுக்கு எஸ்.எம்.எஸ் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில், கல்வியின் துணை கொண்டு உலகை வென்றிடத் துடிக்கும் உங்களுக்கு ஒரு தந்தையின் பேரன்போடு என்றும் உடனிருப்பேன். தமிழக அரசின் புதுமைப் பெண் திட்டத்தில் இணைந்திடும் உங்களுக்கு என் இனியம் கனிந்த வாழ்த்துகள் – மு.க.ஸ்டாலின், தமிழக முதல்வர் (மேலும் விவரங்களுக்கு penkalvi.tn.gov.in) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.