அரக்கோணம்: அரக்கோணம் அருகே கொசஸ்தலை ஆற்றில் குளித்த சென்னையை சேர்ந்த 3 பெண்கள் மூழ்கி பலியாகினர்.ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலத்தை சேர்ந்தவர் ஜியா உல்ஹக்(45). இவர் சென்னையில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். இவரது உறவினருக்கு கடந்த மாதம் 28ம் தேதி திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் புதுமண தம்பதிக்கு விருந்து அளிக்க வீட்டிற்கு அழைத்துள்ளார். இதையடுத்து புதுமண தம்பதி உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த உறவினர்கள் தக்கோலத்திற்கு நேற்று வந்தனர்.
மதியம் விருந்து முடிந்ததும் மாலையில் தக்கோலத்தில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் கொண்டம் என்ற பகுதிக்கு 16 பேர் குளிக்க சென்றுள்ளனர். அங்கு தேங்கியுள்ள தண்ணீரில் குளித்துக்கொண்டு இருந்தனர். அப்போது திடீரென ஆழமான பகுதிக்கு சென்ற 6 பேர் நீரில் மூழ்கி தத்தளித்தனர். இதைப்பார்த்து அவர்களுடன் குளித்து கொண்டிருந்தவர்கள் கூச்சலிட்டனர். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் வந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் 3 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், பள்ளி மாணவி மற்றும் 2 பெண்கள் மயங்கிய நிலையில் இருந்தனர்.
உடனடியாக அவர்களை அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர்கள் வரும் வழியில் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதற்கிடையில் தகவல் அறிந்த தக்கோலம் போலீசார் வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில், பலியானது தலைமை காவலர் ஜியா உல்ஹக்கின் மகள் 9ம் வகுப்பு படித்து வந்த பவுசியா(13), அவரது அண்ணன் மகள்கள் சென்னை புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்த ரசூல்(24), ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த பரிதாபானு(21) என்பது தெரியவந்தது. இதில் ரசூல் திருமணமானவர். பரிதா பானு திருமணம் ஆகாதவர். இதுகுறித்து தக்கோலம் போலீசார் விசாரிக்கின்றனர்.