மும்பை: “அரசியலில் துரோகத்தைத் தவிர வேறெதை வேண்டுமானாலும் பொறுத்துக் கொள்ளலாம். அதனால், பாஜகவுக்கு துரோகம் செய்த உத்தவ் தாக்கரேவுக்கு பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும்” என்று பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான அமித் ஷா கூறியுள்ளார். மும்பையில் இன்று பாஜக தலைவர்களுடன் முக்கிய ஆலோசனையில் அமித் ஷா ஈடுப்பட்டபோது இதை அவர் கூறினார்.
மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியில் பிளவு ஏற்பட, பாஜக ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக்கப்பட்டார். இந்நிலையில், மகாராஷ்டிர பாஜக பிரமுகர்களுடன் அமித் ஷா இன்று சந்திப்பு நிகழ்த்தினார். அப்போது அவர், “மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியில் பிளவு ஏற்பட உத்தவ் தாக்கரேவின் பேராசைதான் காரணம். அதுவே அவர் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தியது. மற்றபடி அதில் பாஜகவின் பங்கு எதுவுமே இல்லை.
உத்தவ் தாக்கரே பாஜகவுக்கு மட்டுமல்ல, மகாராஷ்டிராவுக்கும் அவர் துரோகம் செய்துள்ளார். அதிகாரப் பேராசை அவரது கட்சியை சுருங்கச் செய்துள்ளது. இன்று ஒரு விஷயத்தை நாங்கள் மீண்டும் உத்தவ் தாக்கரேவுக்கு தெளிவுபடுத்து விரும்புகிறோம். நாங்கள் எப்போதுமே அவருக்கு முதல்வர் பதவி தருவதாக வாக்குக் கொடுக்கவில்லை. நாங்கள் எப்போதுமே வெளிப்படையாக அரசியல் செய்கிறோம். எங்கள் அரசியல் பூட்டிய அறைகளில் நடப்பதில்லை. அரசியலில் துரோகம் செய்பவர்களுக்கு நிச்சயமாக தண்டனை கொடுத்தே ஆகவேண்டும்.
மகாராஷ்டிராவில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் 150 இடங்களைக் கைப்பற்றுவதுதான் பாஜகவின் இலக்கு. பிரதமர் மோடி தலைமையில் பாஜகவும், உண்மையான பாஜக தொண்டர்களுக்கு இதனை நோக்கி உழைப்பார்கள். மக்களின் ஆதரவும் எங்களுக்குத்தான் இருக்கிறதே தவிர கட்சிக் கொள்கையையே விட்டுக் கொடுக்கும் உத்தவ் தாக்கரேவுக்கு இல்லை” என்றார்.