டுகுமான் : அர்ஜென்டினா நாட்டில், ‘லெஜியோனேயர்ஸ்’ என்ற நுரையீரல் தொற்று ஏற்பட்டு நான்கு பேர் உயிரிழந்தனர்.
தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவின் வடமேற்கு மாகாணத்தில் உள்ளது, சான்மிகுவல் டிடுகுமான் என்ற நகரம். இங்கு உள்ள ஒரு மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட, 70 வயது மூதாட்டிக்கு, ‘லெஜியோனேயர்ஸ்’ என்ற நுரையீரல் தொற்று ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.அதேபோல், வேறு சிகிச்சைகளுக்காக அங்கு அனுமதிக்கப்பட்டு இருந்த மேலும் மூவரும் லெஜியோனேயர்ஸ் தொற்று ஏற்பட்டு அடுத்தடுத்த நாட்களில் மரணம் அடைந்தனர். அந்த மருத்துவமனையின் ஊழியர்கள் உட்பட மேலும் ஏழு பேருக்கு தொற்று கண்டுபிடிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த தொற்று நோய் பாக்டீரியாவால் ஏற்படுகிறது. நீர்த்துளிகளை சுவாசிக்கும்போதோ, ‘லெஜியோனேல்லா’ என்ற பாக்டீரியா கொண்ட தண்ணீரை குடித்தாலோ நுரையீரலில் தொற்று பரவுவதாக டாக்டர்கள் கூறுகின்றனர். இந்த பாக்டீரியா அசுத்தமான நீர் அல்லது சுத்தம் செய்யப்படாத குளிர்சாதன இயந்திரங்களில் உருவாகிறது.
டுகுமான் நகரில் காய்ச்சல் பாதிப்புடன் வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனையுடன், லெஜியோனேயர்ஸ் பரிசோதனையும் நடத்தப்படுகிறது. காய்ச்சல், உடல்வலி மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுவதே இந்த தொற்றின் அறிகுறி.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement