ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையேயான போட்டி நேற்றிரவு துபாயில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்ய, பேட்டிங் ஆடிய இந்திய அணி அதிரடியான தொடக்கத்தால் 20 ஓவரில் 181 ரன்களைக் குவித்தது. ஆனால் கடைசியில் பாகிஸ்தான் அணி 182 ரன்களைக் குவித்து 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு அர்ஷ்தீப் சிங் தன் கைக்கு வந்த கேட்ச்சைத் தவறவிட்டதுதான் காரணம் என்று பலரும் அவருக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து விமர்சித்துவந்தனர்.
இதனைத் தொடர்ந்து பலரும், அர்ஷ்தீப் சிங் ஒரு காலிஸ்தானி என்று கூறி சமூக வலைதளங்களில் பரப்பி வந்தனர். ஏற்கெனவே முகமது ஷமி ஒரு இஸ்லாமியர் என்பதால் அவர் மீதும் இப்படியான தாக்குதல் நடந்தது நினைவிருக்கலாம்.
இதுமட்டுமின்றி விக்கிப்பீடியாவில் அர்ஷ்தீப் சிங்கின் நாடு இந்தியா என்பதை அகற்றி காலிஸ்தான் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் அர்ஷ்தீப் சிங் மீது மதவெறி தாக்குதல் நடத்தப்படுவதற்கு எதிராக இந்திய அரசு கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. ஒரு முன்னணி கிரிக்கெட் வீரரின் விக்கிப்பீடியாவைக் கூட எப்படி இவ்வளவு சுலபமாக எடிட் செய்ய முடியும் என்றும், அர்ஷ்தீப்பின் விக்கிப்பீடியா பக்கத்தில் எப்படி காலிஸ்தான் என மாற்றப்பட்டது என்பது குறித்தும் நேரில் வந்து பதிலளிக்குமாறு இந்தியாவில் உள்ள விக்கிப்பீடியா அதிகாரிகளுக்கு இந்தியத் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.