டெல்லி: ஆசிரியர் தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடம் தமிழ்நாட்டை சேர்ந்த தொடக்கப்பள்ளி ஆசிரியர் ராமசந்திரன் நல்லாசிரியர் விருதினை பெற்றார். ஆசிரியர் தினத்தையொட்டி நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 45 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வழங்கினார். டெல்லி விக்யான் பவனில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், இமாச்சலப் பிரதேசம், பீகார், மஹாராஷ்டிரா, தெலுங்கானா, பஞ்சாப், மத்திய பிரதேசம், உத்திரகாண்ட் ஆகிய மாநிலங்களில் 2 ஆசிரியர்களுக்கும் மற்ற மாநிலங்களில் தலா ஒரு ஆசிரியருக்கும் விருது வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை நாமநாதபுர மாவட்டம் கீழாம்பல் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி ஆசிரியர் ராமசந்திரன், நல்லாசிரியர் விருதை பெற்றார். மாணவர்கள் போலவே தினமும் சீருடை அணிந்து பள்ளிக்கு செல்லும் ராமசந்திரன், 30 மாணவர்களுக்கு தான் சொந்த செலவில் ஆண்ட்ராய்ட் செல்போனை வாங்கி கொடுத்திருக்கிறார். தன்னுடைய ஊதியத்தில் பெரும் பகுதியை அரசுப்பள்ளி மாணவர்களுக்கு செலவு செய்து வருகிறார் ராமசந்திரன்.
இது தொடர்பான காட்சிகள் இன்றைய விழாவில் ஒளிபரப்பு செய்யப்பட்டன. இதேபோல புதுச்சேரியை சேர்ந்த ஆசிரியர் அரவிந்த் ராஜாவும் குடியரசுத் தலைவரிடம் இருந்து நல்லாசிரியர் விருதை பெற்றுக்கொண்டார். மேலும் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த ஆசிரியை பிரதீப் மேகி மாற்றுத்திறனாளி என்பதால் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு மேடையில் இருந்து கீழே இறங்கி வந்து அவருக்கு விருதினை வழங்கினார்.