வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ஆசியக்கோப்பை டி20 தொடரின் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கேட்சை தவறவிட்ட இந்திய அணியின் அர்ஷ்தீப் சிங்கை பாகிஸ்தான் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அவர் காலிஸ்தானை சேர்ந்தவர் என விக்கிபீடியாவில் அவர்கள் மாற்றியிருந்தனர். இதனை பாகிஸ்தானை சேர்ந்த ரசிகர்கள் செய்திருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இதனையடுத்து விக்கிபீடியா அதிகாரிகளுக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பி உள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கும் ஆசியக்கோப்பை தொடரில் நேற்று(செப்.,5) இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய இந்திய அணி 182 ரன்கள் குவித்தது. சவாலான இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் பாபர்(14), பகர் ஜமான்(15) ஏமாற்றினார்.
பின் இந்திய பவுலர்கள் தடுமாற, ரிஸ்வான், நவாஸ் சுலபமாக ரன் சேர்த்தனர். நவாஸ், 42 ரன்களுக்கு வெளியேறினார். ஹர்திக் பந்தில் ரிஸ்வான்(71) அவுட்டானார். ரவி பிஷ்னோய் வீசிய பந்தை(17.3வது ஓவர்) ஆசிப் அலி துாக்கி அடித்தார். இதனை அர்ஷ்தீப் நழுவவிட்டு அதிர்ச்சி தந்தார். பாகிஸ்தான் அணி 19.5 ஓவரில் 182 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இதனையடுத்து பாகிஸ்தானை சேர்ந்த சிலர் அர்ஷத் சிங்கை சமூக வலைதளங்களில் மோசமாக விமர்சித்து வருகின்றனர். காலிஸ்தானி எனவும் காட்டமாக குறிப்பிட்டனர். விக்கிபீடியா என்ற இணையதளத்திலும், அர்ஷத் சிங்கின் பக்கத்தில் காலிஸ்தானி எனக்குறிப்பிட்டவர்கள், இந்தியர் என்பதை நீக்கிவிட்டு காலிஸ்தானி என மாற்றினர். இதனை பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்நிலையில், இது மத்திய அரசின் கவனத்திற்கு சென்றதை தொடர்ந்து விக்கிபீடியா நிறுவனத்திற்கு மத்திய ஐடி அமைச்சகம் சம்மன் அனுப்பி உள்ளது. பிரிவினையை தூண்டும் வகையில், இந்த செயல் அமைந்துள்ளதால், மாற்றத்தை செய்ய எப்படி அனுமதிக்கப்பட்டது என்பது குறித்து விளக்கமளிக்கும்படி அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement