ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகளைப் போல, சுவிட்சர்லாந்தில் இரண்டு தலைகளைக் கொண்ட ஆமை ஒன்று உள்ளது. இரண்டு தலைகளைக் கொண்ட ரோமானிய கடவுளான `ஜானஸ்’ என்ற பெயர், இந்த ஆமைக்கு சூட்டப்பட்டுள்ளது. ஜெனீவாவில் நேச்சுரல் ஹிஸ்டரி அருங்காட்சியகத்தில் உள்ள இந்த ஆமைக்கு, தேவையான அனைத்து உபசரிப்புகளும் அங்கேயே பூர்த்தி செய்யப்படுகிறது. `இதற்குப் பேசாமல் நாமும் ஆமையாகவே பிறந்திருக்கலாம்’ என்பதுபோல அங்குள்ளவர்கள் ஜானஸை கவனித்து கொள்கின்றனர்.
அதாவது தினமும் காலையில் கிரீன் டீயில் ஒரு குளியல், டெய்சி குடும்பத்தின் வகையைச் சேர்ந்த வெள்ளை மற்றும் மஞ்சள் பூக்களைக் கொண்டு மசாஜ், சிறப்பு டையட், ஆர்கானிக் பழம் மற்றும் காய்கறிகளைக் கொண்ட உணவு என வழங்கப்படுகிறது. அதோடு ஆரோக்கியம் சீராக உள்ளதா என்பதைக் கண்காணிக்க அதன் ஹெல்த் ஸ்டேட்டஸையும் தினமும் பரிசோதனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜானஸ் சனிக்கிழமையன்று, 25 வயதை எட்டியுள்ளது. பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக ஜானஸுடான் செல்ஃபி எடுத்துக் கொள்வது, ஜானஸை பராமரிப்பவர்களை சந்தித்து வாழ்த்து சொல்வது, ஜானஸின் இரண்டு தலைகளின் தனித்தன்மைகள் என்னென்ன என்பதைக் குறித்து விவரிக்கும் அறிவியல் விரிவுரை போன்ற நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.
“இரண்டு தலை, இரண்டு ஜோடி நுரையீரல், இரண்டு வேறுபட்ட குணாதிசயம் என அதிசய உயிரினமாக ஜானஸ் உள்ளது. சில நேரங்களில் அதன் தலைகள் வெவ்வேறு திசைகளில் திரும்பும். வலதுபுறத்தில் உள்ள தலை மிகவும் ஆர்வமாகவும் விழிப்புடனும், உறுதியான குணநலனைப் பெற்றிருக்கும். இடதுபுறம் உள்ள தலை மிகவும் அமைதியாக, சாப்பாடு விரும்பியாக இருக்கும்’’ என ஜானஸின் பராமரிப்பாளரான ஏஞ்சலிகா போர்கோயின் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த ஆமைகளால் தற்காப்புக்காக தன்னுடைய தலையை ஓட்டினுள் இழுத்துக் கொள்ள முடியாததால், காட்டில் வேட்டையாடுபவர்களிடம் இருந்து தப்பிப் பிழைக்க வாய்ப்பில்லை என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஹேப்பி பர்த்டே ஜானஸ்..