உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு செய்யும் நிலையில் காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் ஆலயத்தில் இபிஎஸ் ஆதரவு அதிமுகவினர் சிறப்பு வழிபாடு செய்தனர். செப்டம்பர் மாதம் 2-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொது குழு செல்லும், அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தொடரலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக ஓபிஎஸ் இன்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்கிறார்.
இந்நிலையில் உயர் நீதிமன்ற தீர்ப்பினை வரவேற்கும் விதமாகவும், உச்ச நீதிமன்றத்திலும் ஈபிஎஸ் வெற்றி பெற வேண்டும் என வேண்டிக் கொண்டு காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள வழக்குகளை தீர்த்து வைக்கும் உலக பிரசித்தி பெற்ற வழக்கறுத்தீஸ்வரர் திருக்கோவிலில் ஈபிஎஸ் ஆதரவு அதிமுகவினர் சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர். வழக்கறுத்தீஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, வழக்கினை தீர்த்து வைக்க வேண்டி விளக்கேற்றி வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினார்கள். பின்னர் கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானத்தையும் வழங்கினார்கள்.
இதில் அதிமுக காஞ்சிபுரம் மாவட்ட செயலாளரும்,முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம், அதிமுக நிர்வாகிகள் காஞ்சி பன்னீர்செல்வம், கே.யு.எஸ்.சோமசுந்தரம், வள்ளிநாயகம், பாலாஜி, என்.பி.ஸ்டாலின், களக்காட்டுர் ராஜூ உள்ளிட்ட ஏராளமான ஈ.பி.எஸ்.ஆதரவு அதிமுக நிர்வாகிகளும்,தொண்டர்களும் என பலர் கலந்துக்கொண்டனர்.