காபூல்: ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைந்து ஓராண்டுக்கு மேல் ஆன நிலையில், தாங்கள் ஆட்சி நடத்த அரசியல் சாசனம் தேவையில்லை; இஸ்லாமிய சட்டமே போதும் என்று அவர்கள் கூறியிருக்கின்றனர். அந்நாட்டு நீதித்துறை இணை அமைச்சர் அப்துல் கரீம் ஹைதர் இக்கருத்தைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசுகையில், “இஸ்லாமிய நாடுகளில் புனித குரான் அடிப்படையில் அரசியல் சாசனங்களும் எழுதப்படுகின்றன. எங்களுக்கு தனியாக அரசியல் சாசனம் தேவையில்லை. இஸ்லாமிய சட்டம் எதை அனுமதிக்கிறதோ அதை நாங்கள் மக்களுக்கு தருகிறோம். பெண்கள் உரிமை பொறுத்தவரையிலும் இஸ்லாமிய சட்டப்படியே நாங்கள் அவர்களுக்கு சுதந்திரம் வழங்குகிறோம். நிலைமை சீரடையும்போது இன்னும் கூடுதலான அதிகாரங்கள் அவர்களுக்கு வழங்கப்படும். நாங்கள் உருவாக்கும் சாசனம் அதன் அடிப்படையிலேயே அமையும்” என்றார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டத்தின்படியே ஆட்சி என்று அறிவித்தனர். அதேவேளையில், கடந்த முறையைப் போல் ஆட்சி இருக்காது. பெண் கல்வி, பெண் சுதந்திரம் பேணப்படும், உலக நாடுகளுடன் நட்புறவு ஏற்படுத்தப்படும் என்று உறுதியளித்தனர். ஆனால், தலிபான்களின் ஆட்சி அவ்வாறாக நடைபெறவில்லை.
பெண்கள் சுதந்திரம் பற்றி தலிபான்கள் தொடர்ந்து வாக்குறுதிகளைக் கொடுத்தாலும் கூட அங்கு நடைமுறையில் எதுவுமே அமலில் இல்லை. பெண்கள் பள்ளிகளுக்குச் செல்வது தொடர்பாக இன்னமும் அந்நாட்டு அரசு மவுனம் காக்கிறது. கடந்த மே மாதம் முதல் அங்கு பெண்கள் தலை முதல் கால் வரை மறைக்கும் நீல நிற புர்கா ஆடை அணியும் வழக்கம் அமல்படுத்தப்பட்டது. அவ்வாறு ஆடை அணியாத பெண்களின் கணவர், தந்தை, சகோதரன் என வீட்டில் உள்ள ஆண் உறவுகளுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என எச்சரித்தது.
இந்நிலையில், தாங்கள் ஆட்சி நடத்த அரசியல் சாசனம் தேவையில்லை இஸ்லாமிய சட்டமே போதும் என்று வலியுறுத்தியுள்ளனர். போதைப்பொருள் பயன்பாடு, கடத்தல் போன்ற குற்றங்களுக்கு பொது இடத்தில் வைத்து குற்றவாளிகள் மீது கல்லெறியும் தண்டனைகளும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.