மீரட்: ஐந்தாம் வகுப்பு பயிலும் தங்கள் எப்பொழுதும் ஆண் நண்பர்களுடன் பேசியதால் ஆத்திரமடைந்த பெற்றோர், அவரை இரக்கமின்றி கொலை செய்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரைச் சேர்ந்தவர்கள் பப்லூ (43) – ரூபி (36) தம்பதியர். இவர்களது ஒரே மகளான சவுமியா (10), அங்குள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்திருக்கிறார்.
படிப்பிலும், விளையாட்டிலும் படுசுட்டியாக இருந்த சவுமியாவுக்கு பள்ளியில் அதிக நண்பர்கள் இருந்துள்ளனர். அவர்களில் ஆண் நண்பர்களும் அடக்கம்.
தந்தைக்கு பிடிக்கவில்லை
ஆனால், சவுமியாவின் தந்தை பப்லூவுக்கு, தனது மகள் ஆண் நண்பர்களுடன் பேசுவது சுத்தமாக பிடிக்கவில்லை. ‘பெண் பிள்ளைகளுடன் மட்டும் பழகு; ஆண் பிள்ளைகளுடன் பழகாதே’ என அவர் மகள் சவுமியாவிடம் அடிக்கடி கூறி வந்திருக்கிறார். ஆனால், வெகுளியாக இருந்த சிறுமி சவுமியா, ஆண் – பெண் பேதம் இல்லாமல் அனைவரிடமும் அன்பாக பழகி வந்துள்ளார். பள்ளிப் பாடம் தொடர்பாக செல்போனில் நண்பர்களுடன் பேசுவதையும் அவர் வழக்கமாக கொண்டிருக்கிறார்.
கொலை செய்ய முடிவு
இதனிடையே, சவுமியாவின் இந்த நடவடிக்கை, சமீபகாலமாக தந்தை பப்லூவுக்கு மிகுந்த ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மனைவி ரூபியிடமும் அவர் கூறியிருக்கிறார். ஆண் நண்பர்களுடன் பழகுவது தங்களுக்கு பிடிக்கவில்லை என தாயார் ரூபியும் சவுமியாவிடம் சொல்லி இருக்கிறார். ஆனால் அவர்களின் பேச்சை சிறுமி சவுமியா கேட்கவில்லை. இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற பப்லூ – ரூபி தம்பதியர், மகள் சவுமியாவை தீர்த்துக் கட்ட முடிவு செய்தனர்.
கால்வாயில் வீசினர்
அதன்படி, கடந்த 30-ம் தேதி இரவு, ஹோட்டலுக்கு சாப்பிட செல்லலாம் எனக் கூறி சவுமியாவை அவர்கள் காரில் அழைத்துச் சென்றனர். அப்போது இரவு 10 மணியளவில், யமுனா கால்வாய் மேம்பாலத்துக்கு வந்த அவர்கள், தங்கள் மகளை அழைத்து கால்வாயை பார்ப்பது போல நின்றுள்ளனர்.
இன்னும் சில நொடிகளில் தனக்கு என்ன நேரப் போகிறது என அறியாத சிறுமியான சவுமியா, ஏரியை உற்சாகமாக பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது பப்லூவும், ரூபியும் ஈவு இரக்கம் இல்லாமல் தங்கள் மகளை தூக்கி கால்வாயில் வீசினர். இதில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சவுமியா நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
கைது நடவடிக்கை
பின்னர் இருவரும் ஒன்றும் நடக்காது போல வந்து, கடந்த 1-ம் தேதி தங்கள் மகளை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதில் பெற்றோரின் நடவடிக்கையில் போலீஸாருக்கு சந்தேகம் வந்ததால் அவர்களை கண்காணித்துள்ளனர். இதில், மகள் காணாமல் போன பதற்றம் சிறிதும் இல்லாமல் அவர்கள் இருந்துள்ளனர்.
இதையடுத்து, போலீஸார் அவர்களை அழைத்துச் சென்று தனித்தனியாக விசாரணை நடத்தினர். இதில் இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தால் போலீஸார் தங்கள் பாணியில் விசாரித்தனர். அப்போது இருவரும், தாங்கள் தான் தங்கள் மகளை கொன்றோம் என வாக்குமூலம் அளித்தனர். ஆண் நண்பர்களுடன் பேசுவது பிடிக்காததால் இப்படி செய்துவிட்டோம் என அவர்கள் கூறினர். இதனைத் தொடர்ந்து போலீஸார் அவர்களை கைது செய்தனர். இறந்து போன சவுமியாவின் உடலை தேடும் பணியில் தீயணைப்புப் படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.