அதிமுக உட்கட்சி மோதல் தொடர்பாக ஓபிஎஸ் இபிஎஸ் அணிகள் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளன.
ஜூலை 11 பொதுக்குழு தொடர்பாக உயர் நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ஓ.பன்னிர் செல்வம் தரப்புக்கு சாதகமாக இருந்தது. இதனால்
தரப்பு மேல்முறையீடு செய்தது. இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு பொதுக்குழு செல்லும் என்று அறிவித்தது. இதனால் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு சிக்கல் இல்லை என்ற நிலை உருவானது.
நீதிமன்ற தீர்ப்பு தங்களுக்கு எதிராக வந்த நிலையில் சட்டப் போராட்டம் தொடரும் என்று ஓ.பன்னீர் செல்வம் அறிவித்தார். இது குறித்து இரண்டு நாள்களாக சட்ட வல்லுநர்களிடமும், தனது ஆதரவாளர்களிடமும் ஆலோசனை நடத்தினார் ஓபிஎஸ். இதனால் இன்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பிடமும் விசாரிக்க வேண்டும் என்று கேவியட் மனு தாக்கல் செய்துள்ளதாக நேற்றே தகவல்கள் வெளிவந்தன.
உயர் நீதிமன்ற தீர்ப்பு ஓபிஎஸ் தரப்புக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தாலும் தொடர்ந்து ஆதரவாளர்களை தக்கவைக்கவும், அந்தப் பக்கத்திலிருந்து ஆதரவாளர்களை இழுத்து வரும் பணிகளையும் கைவிட்டுவிட வேண்டாம் என தங்கள் அணியினருக்கு ஓபிஎஸ் தரப்பு கூறியுள்ளதாம்.
என்ன சொல்லி ஆதரவாளர்களை தக்கவைக்கிறார்கள் என்று விசாரிக்கையில் சில விஷயங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டனர் தென் மண்டல ரத்தத்தின் ரத்தங்கள்.
“உயர் நீதிமன்ற தீர்ப்பு இறுதியானது அல்ல, இன்னும் உச்ச நீதிமன்றம் இருக்கிறது. தேர்தல் ஆணையம் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் டெல்லியின் ஆதரவும் ஆசியும் நம் பக்கமே இருக்கிறது. ஒருங்கிணைந்த அதிமுக தான் வெற்றிக்கு வழி வகுக்கும் அது இல்லையேல் கூட்டணி அமைத்தாலும் நமக்கு பலன் இருக்காது என டெல்லி நினைக்கிறது. எனவே சசிகலா, ஓபிஎஸ், எடப்பாடியை இணைப்பது என்ற முடிவை டெல்லி எடுத்துவிட்டது. தினகரனின் அமமுகவுட்ன் கூட்டணியை தொடரவும் திட்டமிட்டுள்ளது. அதிமுகவின் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் விழுந்தால் தான் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு பலன் கிடைக்கும்.
இல்லையேல் திமுக அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றால்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. அதிமுகவின் நலனுக்காக இல்லாவிட்டாலும் பாஜக தனது நலனுக்காகவேனும் ஒருங்கிணைந்த அதிமுகவை அமைக்க களமிறங்கிவிட்டது. எனவே இப்போது ஓபிஎஸ் பக்கம் நீங்கள் வந்தால் இணைப்பிற்கு பின்னர் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுக்கு பதவிகளை பெற்றுத் தரும் போது பெரிய பதவிகள் கிடைக்கும். அந்த பக்கம் ஏற்கெனவே ஹவுஸ் ஃபுல். எனவே கூட்டத்தில் ஒருவராகத் தான் இருக்க முடியும்” என்று பேசிவருகிறார்களாம்.
ஆனால் அடுத்தடுத்த பரீட்சைகளில் ஓபிஎஸ் பாஸ் ஆகிறாரா, துணிந்து போராடுகிறாரா என்பதைப் பார்த்து தான் அவர் பக்கம் நிர்வாகிகள் வருவார்கள் என்று சொல்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.