ஒட்டாவா: வட அமெரிக்க நாடுகளில் ஒன்றான கனடாவில் கண்ணில் தென்பட்டவர்களை சரமாரியாக கத்தியால் குத்திய 2 நபர்களால் நாட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். பெரிய அளவில் நடைபெற்ற கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.
சரமாரியாக கண்ணில் தென்பட்டவர்களை இரண்டு நபர்கள் கத்தியால் குத்தியதாகவும் இதில் 10 பேர் கொல்லப்பட்டதாகவும் 12-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
கனடாவின் ஜேம்ஸ் ஸ்மித் க்ரீ நேஷன் மற்றும் அருகிலுள்ள வெல்டன் நகரம், சஸ்காட்செவன் ஆகிய இரு பகுதிகளில் இந்த கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் நடைபெற்றது.
10 பேர் பலி
தாக்குதலில் ஈடுபட்ட இரு நபர்கள் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியதாக சொல்லப்படுகிறது. இந்த தாக்குதல் குறித்து அங்குள்ள நேரப்படி அதிகாலை 5.40 மணிக்கு போலீசுக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். எனினும் இந்த கொடூரமான தாக்குதலில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 12 க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.
உஷார்படுத்தப்பட்ட போலீசார்
இன்னும் பலர் தாமதமாகவே ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றுவருவதாகவும் கூறப்படுகிறது. இந்த படுபாதக செயலில் ஈடுபட்ட இரு நபர்களையும் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். நகரம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். செக்போஸ்ட்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்ட இரு நபர்களின் அடையாளமும் தெரியவந்துள்ளது.
தீவிர தேடுதல் வேட்டை
டேமைன் மற்றும் மைல்ஸ் சண்டர்ஸன் என்ற இருவர்தான் இந்த தாக்குதலை நடத்தியிருப்பதாக கனடா போலீசார் தெரிவித்தனர். இருவரும் 30 மற்றும் 31 வயது நபர்கள் என்று தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் அவர்களது புகைப்படங்களையும் வெளியிட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். கருப்பு நிற நிஷான் ரோக் ரக காரில் குற்றவாளிகள் இருவரும் தப்பி சென்றதாக சந்தேகிக்கப்படுகிறது. அப்பகுதியில் நெடுஞ்சாலை முழுவதும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவசர நிலை
கத்திக்குத்து தாக்குதலையடுத்து 25 ஆயிரம் மக்கள் தொகையை கொண்ட ஜேம்ஸ் ஸ்மித் கிரி நேஷன் பகுதியில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சஸ்காட்சுவான் மாகாணத்தில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கத்திக்குத்து தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் தங்கள் நேசத்துக்குரிய நபர்களின் உயிரிழப்பை தாங்க முடியாமல் கண்ணீர் விட்ட காட்சிகள் நெஞ்சை உறையவைப்பதாக அமைந்துள்ளது.
திட்டமிட்டு தாக்குதல்?
சில நபர்களை திட்டமிட்டு கத்தியால் குத்தப்பட்டு இருப்பது போல் தெரிவதாக உள்ளூர் போலீசார் தெரிவித்தனர். இந்த கொலைக்கான காரணம் குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை. குற்றசெயலில் ஈடுபட்டதாக கருதப்படும் சந்தேக நபர்கள் ரெஜினா மாகாணத்தில் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த மாகாண போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.